நீங்கள் மெக்டொனால்ட்ஸ் ரசிகரா? உங்கள் டேட்டா திருடப்பட்டிருக்கலாம்..!

நீங்கள் மெக்டொனால்ட்ஸ் ரசிகரா? உங்கள் டேட்டா திருடப்பட்டிருக்கலாம்..!

நீங்கள் மெக்டொனால்ட்ஸ் ஆப் மூலம் ஆர்டர் செய்து பர்கர் சாப்பிடுபவரா? உங்கள் பெயர், முகவரி, அலைபேசி எண் மற்றும் வங்கிக் கணக்கின் தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம். மெக் டியில் உணவு உண்பதற்கும், இந்தத் தகவல்கள் திருடு போகவும் என்ன தொடர்பு என்று கேட்கலாம். ஆம் அமெரிக்காவைச் சேர்ந்த துரித உணவகமான மெக்டொனால்ட்ஸ் இந்தியாவின் செயலியின் மூலம் 22 லட்சம் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது. இதனை ஒரு இணைய பாதுகாப்பு நிறுவனம் கண்டறிந்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

மெக்டொனால்ட்ஸின் இணையதளம் மற்றும் ஆப் சர்வர்கள் மிகவும் பாதுகாப்பு குறைவான கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது. இந்த சர்வரில் தான் வாடிக்கையாளர்களின் தகவல்கள் பதியப்பட்டுள்ளன. இதிலிருந்து தான் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள மெக்டொனால்ட் இந்தியா, ”வாடிக்கையாளர்கள் தகவல்கள் வெளியாகியுள்ளது உண்மை தான். ஆனால் மெக்டொனால்ட் எந்தவிதமான வங்கி பரிவர்த்தணை தகவல்களையும் சேமிப்பதில்லை. மேலும் பாஸ்வேர்ட் போன்ற தகவல்களும் பாதுகாப்பாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இணையதளம் மற்றும் ஆப்-ன் பாதுகாப்புகளை அதிகரித்துள்ளோம். வாடிக்கையாளர்கள் உங்களது ஆப்பை அப்டேட் செய்து கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளது. வாடிக்கையாளர்கள் தகவல்கள் இனிமேல் அதிக கவனத்துடன் பாதுகாக்கப்படும் என்ற உறுதியை அளிப்பதாகவும் கூறியுள்ளது.

இதுபோன்ற குற்றங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை பெரிய அளவில் எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை என்பதால் மெக் டொனால்ட்ஸுக்கு அபராதம் ஏதும் விதிக்கப்படவில்லை. இதேபோல் இந்தியாவில் 50க்கும் அதிகமான நிகழ்வுகள் நடந்துள்ளன.

கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் 32 லட்சம் டெபிட் கார்டுகளை மாற்றித் தரவோ அல்லது வாடிக்கையாளர்களை பின் நம்பரை மாற்றவோ சொல்ல வங்கிகள் முடிவெடுத்தன, இதற்கு முக்கிய காரணம் சீனாவில் அங்கீகாரமற்ற முறையில் இந்த எண்கள் பயன்படுத்தப்பட்டு கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்படுகிற‌து என்ற குற்றச்சாட்டு வெளியானது தான். இந்த பரிமாற்றங்கள் சீனாவில் ஏ.டி.எம், பொருட்களை பர்சேஸ் செய்யும் இடம் போன்ற இடங்களில் பதிவாகியிருந்தது தெரியவந்தது.

இதுபோன்ற நிகழ்வுகளில் சிக்காமல் இருக்க அடிக்கடி உங்கள் பாஸ்வேர்டை மாற்றுவது, எந்த நிறுவனத்தின் ஆப்களிலும் உங்களது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களைப் பதிந்து வைப்பது போன்ற செயல்களைத் தவிருங்கள். இந்த ஆப்களில் பயன்படுத்தும் இ-மெயில் முகவரியில் வேறு எந்த பர்சனல் விஷயங்களைப் பயன்படுத்தாதீர்கள். ஒருவேளை இந்த கணக்கு ஹேக் செய்யப்பட்டாலும் அதில் பெரிதாக பர்சனல் விஷயங்கள் ஏதும் வெளியாகமால் இருக்கும்.

மெக்டொனால்ட்ஸில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவத்தில் 22 லட்சம் பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதே தவிர, பெரிதாக வங்கி கணக்குகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகவில்லை. அதனால் ஓரளவுக்கு வாடிக்கையாளர்கள் நிம்மதி அடையலாம். இதேபோன்ற விஷயங்கள் எல்லா ஆப்களிலும் நடக்க வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. ஒரே ஒரு பர்கர் ஆர்டர் செய்து மொத்த பணத்தையும் இழக்கும் அளவுக்கு இருக்காதீர்கள். நிறுவனங்களும் டிஜிட்டல் உலகில் வாடிக்கையாளருக்கு பயமற்ற சூழலை உருவாக்க வேண்டும்.

Leave a Reply