நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்… இவர் இருந்தால்..! #InvestmentTips

நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்… இவர் இருந்தால்..! #InvestmentTips

அண்ணாமலை’ ரஜினி, ‘சூர்யவம்சம்’ சரத்குமார் என சினிமாவில் மட்டும் ஒரே பாடலில் கோடீஸ்வரர் ஆகிறார்கள். ஆனால், நிஜ வாழ்க்கையில் பணக்காரர்கள் ஆவதற்குப் பல படிகளை ஏற வேண்டியுள்ளது; பல பயணங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது; பல கஷ்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
நல்ல ஆசிரியர்!

முக்கியமாகப் பல வருடங்கள் இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு உழைத்தாலும் ஒரு சிலரால் மட்டுமே பணக்காரர் ஆக முடிகிறது. மற்றவர்கள், அந்த கனவிலேயே கடைசி வரை காலத்தை கடத்த வேண்டியுள்ளது. உழைத்தால் நிச்சயம் வாழ்க்கையில் முன்னுக்கு வரலாம், பணக்காரர் ஆகலாம். அதேசமயம் நாம் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்துக் கொண்டு இருக்கும்போது, நம்முடைய பணத்தையும் உழைக்க வைத்தால் எளிதாக கோடீஸ்வரர் ஆகலாம். எப்படி எனில் பணத்தை பீரோ அல்லது பேங்க் லாக்கரில் தூங்க வைக்காமல், நல்ல நிதி சார்ந்த திட்டங்களில் முதலீடு மேற்கொண்டால் லட்சாதிபதி என்ன கோடீஸ்வரர் கூட ஆகலாம். ஆனால், இவை அனைத்தும் ஒரே வாரத்திலோ, ஒரே மாதத்திலோ நடைபெறாது. நல்ல முதலீட்டு சார்ந்த திட்டங்களில் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக முதலீடு மேற்கொண்டால் நிச்சயம் பணக்காரர் ஆகலாம்.

ஆனால், நம்மில் பலர் பங்குச் சந்தையில் பணத்தைச் சம்பாதிப்பதற்கு பதிலாக பணத்தை இழந்து வருகின்றனர்; மோசமான நிதி சார்ந்த திட்டங்களில் முதலீடு மேற்கொண்டு நஷ்டத்தைச் சந்திக்கின்றனர். மொத்தத்தில் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை விழிப்புஉணர்வு இல்லாமல் ஏதேதோ செய்து வருகின்றார்கள். நம் வாழ்க்கையில் நல்ல ஆசிரியர் கிடைத்தால் சிறந்த மாணவனாக எப்படி உருவாக முடிகிறதோ, அதைப்போல நல்ல நிதி ஆலோசகர் கிடைத்தால் நம் வாழ்க்கையை வளமாக்கவும் முடியும், பணக்காரர் ஆகவும் முடியும். ஆனால், நம்மில் பலர் `அவரு சொன்னாரு, இவரு சொன்னாரு’ என்று காரணம் சொல்லியே பணத்தை வீணாக்கி வருகின்றோம்.

suresh வாழ்க்கையை வளமாக்க `சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகரைத் தேர்வு செய்வது எப்படி’ என்று மைஅஸெட் கன்சாலிடேஷன்.காம்., நிதி ஆலோசகர், சுரேஷ் பார்த்தசாரதியிடம் கேட்டோம்.

“பெரும்பாலும் பல முதலீட்டாளர்கள் நல்ல மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகரைத் தேர்வு செய்வதில் மிகவும் குழப்பமடைகின்றனர். நல்ல ஆலோசகரைத் தேர்வு செய்வதைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் அவர் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் சங்கத்தின் (Association of Mutual Funds of India – AMPI) சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும். அப்போதுதான் அவரால் உங்களுடைய தேவைக்கு ஏற்றார்போல் சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை பரிந்துரைக்க முடியும்.

24 மணி நேரமும் ஆலோசனை!

முதலில் ஆலோசகர் வெளிப்படைத்தன்மையாகச் செயல்பட வேண்டும். அவரது வருமானத்தை விட வாடிக்கையாளர் தேவை புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் எல்லாம் பங்குச் சந்தை சார்ந்தது. அதனால், ஆலோசகரால் எந்த வருமானத்தையும் உறுதியாகக் கூற முடியாது. பல நேரங்களில் முதலீட்டாளர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவராக இருக்கிறார்கள்; எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் அது சந்தையை பாதிக்குமா என்ற அச்சம் அடைகின்றனர். அதுபோன்ற சமயத்தில் ஆலோசகர், தனது முதலீட்டாளர்களுக்கு போதுமான தகவல்களை வழங்க வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகர் அடிக்கடி புதிய ஃபண்ட்கள் மற்றும் திட்டங்களை பரிந்துரைக்கக்கூடாது. பொதுவாகக் கடன் சார்ந்த திட்டங்கள் உட்பட 10 முதல் 12-க்கும் மேற்பட்ட திட்டங்களை பரிந்துரைக்கக் கூடாது. உங்களுடைய சந்தேகங்களை பூர்த்தி செய்பவராக இருக்க வேண்டும். சந்தைச் சிறப்பாக செயல்பட்டு உங்களுடைய வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் உங்களுடைய போர்ட்ஃபோலியோவை சமநிலை செய்ய வேண்டும். உங்களுக்குத் தெரியாமல் உங்களுடைய விவரங்களை மூன்றாம் நபருக்குப் பகிரக்கூடாது. உங்கள் ஆலோசகர் தொடர்ந்து அவருடைய திறன்களை மேம்படுத்துபவராக இருக்கிறாரா என்பதைச் சரிபார்க்க வேண்டும். ஈக்விட்டி சந்தைகளின் போக்குக்கு ஏற்ப அவர் தன்னை மேம்படுத்தி வைத்திருக்க வேண்டும். ஆலோசகர் 24 மணிநேரமும் ஆலோசனை வழங்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால், முதலீடு குறித்து எந்தச் சந்தேகம் எழுப்பினாலும் உடனே அதைத் தீர்த்து வைப்பவராக இருக்க வேண்டும்.

நம்பிக்கையுடன் முதலீடு செய்யுங்கள்!

முதலீட்டாளரிடம் அடிக்கடி முதலீடு மேற்கொள்வது தொடர்பாக நெருக்கடி கொடுக்கக் கூடாது. கண்டிப்பாக அவர் நீங்கள் மேற்கொள்ளும் முதலீட்டுக்கான செலவினை தெளிவுபடுத்த வேண்டும். உங்கள் குணாதிசயம் மற்றும் நோக்கம் அடிப்படையில் உங்களுக்கான சரியான மியூச்சுவல் ஃபண்டினை அடையாளம் கண்டு சரியான ஃபண்டினை பரிந்துரைக்க வேண்டும்.

உங்களுடைய ஆலோசகர் தொடர்ந்து சரியான காரணம் இல்லாமல் போர்ட்ஃபோலியோவை கடைந்தெடுத்து பரிந்துரைக்கக் கூடாது. எனவே, நல்ல ஆலோசகரைத் தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஆலோசகரைத் தேர்ந்தெடுக்கும் முன் அவரை ஒரு சில முறை சோதிக்கலாம். ஆனால், அதன் பின் ஆலோசகருடன் தகுந்த முறையில் உறவுகளை மேம்படுத்தி நம்பிக்கையுடன் முதலீட்டைத் தொடருங்கள்” என்று முடித்தார்.

நல்ல நிதி ஆலோசகரைத் தேர்ந்தெடுத்து, உங்களுடைய உழைப்பை மட்டுமே நம்பாமல் நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாய் பணத்தையும் நல்ல முதலீட்டு சார்ந்த திட்டங்களில் உரமாக விதையுங்கள், ஒரு நாள் விருட்சமாக வளரும். நீங்களும் நிச்சயம் கோடீஸ்வரர் ஆகலாம்.

Leave a Reply