தேச துரோக வழக்கு. தானாக முன்வந்து கைதான வைகோ

தேச துரோக வழக்கு. தானாக முன்வந்து கைதான வைகோ

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக பேசியதாக தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜாமீன் வேண்டாம் என்று கூறியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் மதிமுக தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னை ராணி சீதை மன்றத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ‘இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் கருத்துகளை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் தேசத் துரோக வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வைகோ, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். தேசத் துரோக வழக்கு காரணமாக அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது. இந்நிலையில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் இந்த தேசத்துரோக வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வைகோ மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மேலும் தானாக முன் வந்து இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தின் 13வது குற்றவியல் நடுவர் கோபிநாத் முன்னிலையில் வைகோ சரணடைந்தார். நீதிபதியிடம் பிணையில் செல்ல விருப்பமில்லை என வைகோ தெரிவித்ததால் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வைகோ கைது செய்யப்பட்டு புழல் சிறையிலடைக்கப்பட்டார்.

Leave a Reply