சிறையில் வைகோ மெளன விரதம் இருப்பது ஏன்?
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று மௌன விரதம் இருந்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.
கடந்த 2009ஆம் ஆண்டு கலந்து கொண்ட ஒரு விழாவில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சமீபத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வைகோ ஜாமீன் பெற மறுத்துவிட்டதால் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
புழல் சிறையில் இருக்கும் வைகோவிற்கு முதல் வகுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் இருக்கும் அறையில் ஒரு மின்விசிறி , கட்டில் , தலையணை , நாற்காலி ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர் படிப்பதற்காக தினமும் ஒரு ஆங்கில, தமிழ் நாளிதழ்கள் வழங்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் வைகோ இன்று சிறையில் மௌன விரதம் இருந்து வருவதாகவும், அவருடைய தந்தை வையாபுரியாரின்யின் நினைவு நாளையொட்டி இந்த மெளன விரதம் என்றும் அவருடைய கட்சியினர் தெரிவித்தனர்.