அனைத்து பள்ளிகளிலும் யோகா! அதிக கட்டணம் விதித்தால் நடவடிக்கை! அடுத்தடுத்த அதிரடியில் உபி முதல்வர் யோகி
உத்தரபிரதேச முதல்வராக பதவியேற்றது முதல் யோகி ஆதித்யநாத் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வரும் நிலையில் நேற்று அனைத்து அரசு பள்லிகளிலும் யோகா மற்றும் பெண்களின் பாதுகாப்புக்காக தற்காப்புக்கலையும் அவசியம் கற்றுத்தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற கல்வித்துறை அதிகாரிகள் கூட்டத்தில் அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதுமட்டுமின்றி அரசு பள்ளிகளில் பணிப்புரியும் ஆசிரியர்கள் தனியாக பயிற்சி மையங்கள் வைத்து நடத்துவதற்கு தடை விதித்துள்ள முதல்வர், தடையை மீறி தனியார் பயிற்சி மையம் வைத்து நடத்தும் அரசு ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அதேபோல் அதிக கட்டணம் வசூல் செய்யும் தனியார் பள்ளிகளை அடையாளம் காணவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள முதல்வர், பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில், உ.பி கல்வி அமைச்சகம் வழிகாட்டு விதிகள் வகுக்க உள்ளதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து பல்கலைக்கழங்களிலும், ஒரே மாதிரியான பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்தவும் முதல்வர் யோகி வலியுறுத்தி உள்ளார்.