ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு. வாகனங்கள் நடுவழியில் நிறுத்தம்
ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவு காரணமாக அந்த சாலை மூடப்பட்டதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக இன்று அந்த பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில், கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வரும் நிலையில் நேற்றிரவு ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, நேற்று இரவு உடனடியாக தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.
இந்தநிலையில் இன்று காலை மீண்டும் அதே பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால், ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை அபாயகரமானதாக உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அந்த சாலையில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் நீண்ட வரிசையில் வாகனங்கள் ஆங்காங்கே சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஸ்ரீநகரில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் பெருந்துயரத்தில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.