தளத்தை அழகாக்கும் தரை விரிப்புகள்
வீட்டுச் சுவர்களை அலங்கரிக்கப் புகைப்படங்கள் மாட்டுகிறோம். வண்ணம் தீட்டுகிறோம். சுவர் அலமாரிகள் கொண்டு, செயற்கைப் பூக்கள் கொண்டு அலங்கரிக்கிறோம். ஆனால் தரையை அழகுபடுத்தத் தரை விரிப்புகள் மட்டும்தான். இந்தத் தரை விரிப்புகள் இன்று அழகுக்காகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. ஆனால் தொடக்க காலத்தில் தரை விரிப்புகள் தரைத் தளத்தில் உள்ள மேடு பள்ளங்களைச் சரிசெய்வதற்காகத்தான் பயன்படுத்தப்பட்டன.
தொடர்ந்து பயன்பாட்டில் இருந்துவந்த தரைவிரிப்புகள் மெல்ல மெல்ல அழகு கூடி, அலங்காரப் பொருளாக மாறிவிட்டன. இப்போது மிக துல்லியமான அளவில் சமமான தரையைக் கொண்ட வீடுகள் கட்டப்படுகின்றன. அறையின் தட்ப வெப்ப நிலையையும் மின்சாதனங்களின் உதவியோடு நமது விருப்பத்திற்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ள முடிகிறது. எனவே தரை விரிப்புகள் அலங்காரப் பொருளாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அதிலும் வீட்டு உரிமையாளரின் வசதியைத் தெரிவிக்கும் அடையாளமாகவும் மாறிவிட்டன.
தரை விரிப்புகளில் இரண்டு வகைகள் உள்ளன. அறையின் தரை முழுவதையுமே மூடும் விரிப்புகள் கார்பெட் எனப்படுகின்றன. கதவை ஒட்டியோ அல்லது இருக்கைகள் இல்லாத இடங்களிலோ அழகுக்காக விரிக்கப்படும் சிறிய அளவிலான விரிப்புகள் ‘மேட்’ அல்லது ‘ரக்’ எனப்படுகின்றன.
தற்போது வீடுகளிலும் அலுவலகங்களிலும் குளிர்வசதி செய்யப்பட்ட அறைகளில் தரை முழுவதையுமே விரிப்பைக் கொண்டு மூடும் வழக்கம் அதிகரித்துவருகிறது. இதனால் அறையில் உண்டாகும் ஒலியளவு கட்டுப்படுத்தப்படுகிறது என்பது ஒரு கூடுதல் பயன்.
பெரிய தரை விரிப்புகளைத் தேர்வு செய்யும்போது அது பாதங்களை உறுத்தாதவாறு இருப்பது முக்கியம். குழந்தைகளோ முதியவர்களோ தரையில் தவறி விழுந்தால் அடிபடாதவாறு இருக்க வேண்டும். கார்பெட்கள் வாங்கும்போது நிறம், விலை, வடிவமைப்பு ஆகியவற்றைக் காட்டிலும் அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டுமா என்பது மிக முக்கியம். சில கார்பெட்கள் கொஞ்சம் அழுக்குப்பட்டாலே அகத்தின் அழகைக் காட்டிவிடும். உடனடியாகச் சுத்தப்படுத்த முடியாவிட்டால் அதன் மங்கலான தோற்றம் நமது புத்துணர்ச்சியையும் மங்கச் செய்துவிடும்.
கார்பெட்டின் நிறத்தைத் தேர்வு செய்யும்போது சுவரின் வண்ணம், பயன்படுத்தப்படும் இருக்கைகள், அறையை அலங்கரிக்கும் எதிர்காலத் திட்டங்கள் ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
விலை மதிப்புள்ள கம்பளி தொடங்கி நைலான், பாலியஸ்டர் என பலவிதமான நூலிழைகளைக் கொண்டு கார்பெட்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் இழைகள் பின்னப்பட்டுள்ள விதம், அழுத்தம் தாங்குகின்ற திறன் ஆகியவற்றையும் பார்த்து வாங்க வேண்டும்.
கார்பெட்டைத் தேர்வு செய்வதைவிட அதைப் பராமரிப்பதே பெரிய வேலை. கார்பெட்டில் ஏதேனும் திரவப் பொருட்கள் சிந்திக் கறை ஏற்பட்டால் அந்த இடத்தில் முகத்திற்குப் பயன்படுத்தும் ஷேவிங் க்ரீமைத் தடவி அரைமணி நேரம் கழித்து தண்ணீரையும் துணியையும் கொண்டு சுத்தப்படுத்தலாம். கறை எளிதில் நீங்கிவிடும்.
காலணிகளோடு ஒட்டிக்கொண்டு வரும் சூயிங்கம் கார்பெட்டில் ஒட்டிக்கொண்டால் அந்த இடத்தில் ஐஸ் கட்டியை வைத்து சிறிய கரண்டியைக் கொண்டு சுரண்டி எடுக்கலாம். சூயிங்கம் குளிரில் இறுகி எளிதாக வெளிவந்துவிடும்.
சிறிய விரிப்புகளைத் தூய்மையாகப் பராமரிப்பது எளிதானது. அடித்துத் துவைத்து கசக்கிப் பிழிந்து காயப்போட்டுவிடலாம். ஆனால் அறை முழுவதற்குமான தரை விரிப்புகளில் சேர்ந்துள்ள தூசுகளை வாக்குவம் க்ளீனரைக் கொண்டே சுத்தப்படுத்த முடியும்.
தரை விரிப்புகளில் கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு அழுக்குகள் இருக்கும். நுண்ணிய கிருமிகளுக்கும் இருக்கும். அதனால் தரை விரிப்புகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். உதறி விரிக்க வேண்டும். வெயிலில் உலர்த்த வேண்டும். இல்லாவிட்டால் தரை விரிப்புகளில் உள்ள கிருமிகள் நம் வீட்டைச் சொந்தம் கொண்டாடத் தொடங்கிவிடும்.