வடகொரியாவை நோக்கி அமெரிக்க படைகள். சிரியாவை அடுத்து வடகொரியா மீதும் தாக்குதலா?
உலக நாடுகளை ஏவுகணை சோதனை மூலம் அச்சுறுத்தி வரும் வடகொரியாவின் கொட்டத்தை அடக்க அந்நாட்டின் மீது படையெடுப்பு நடத்த அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் முடிவு செய்துள்ளன. இதனை உறுதி செய்வது போல் கொரிய தீபகற்பம் நோக்கி அமெரிக்க போர்க்கப்பல்கள் விரைந்து சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் உறுதி செய்கின்றன
கடந்த சில ஆண்டுகளாகவே அவ்வப்போது அணுகுண்டு சோதனை, ஏவுகனை சோதனை ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் வடகொரியா, கடந்த 6ஆம் தேதி மீண்டும் நடுத்தர ரக ஏவுகணை ஒன்றை கிழக்கு கடலோரத்தில் அமைந்துள்ள சின்போ நகரில் ஏவி சோதனை செய்தது. இந்த நடவடிக்கை அண்டை நாடான தென்கொரியா, ஜப்பான் நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் ஒரு ஏவுகணை சோதனையில் ஈடுபட வடகொரியா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
எனவே இனியும் பொறுமை காத்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்த அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் வடகொரியாவின் அணு ஆயுத மிரட்டலை கையாள்வதற்கு தயாராகி வருகின்றன. இதன் நடவடிக்கையாக அதிரடியாக கொரிய தீபகற்பம் நோக்கி ‘தி கார்ல் வின்சன்’’ என்ற தாக்குதல் குழுவை நகரும்படி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை பற்றி யு.எஸ். பசிபிக் பிரிவு குறிப்பிடும்போது, ‘‘அமெரிக்காவின் தி கார்ல் வின்சன் தாக்குதல் குழு கொரிய தீபகற்ப பகுதிக்கு விரைவது, அந்த பிராந்தியத்தில் எதையும் சந்திப்பதற்கு தயார் நிலையில் வைத்திருப்பதற்குத்தான்’’ என கூறியது.
சமீபத்தில் சிரியா மீது அதிரடி தாக்குதல் நடத்திய அமெரிக்கா மிக விரைவில் வடகொரியா மீதும் தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.