ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து எதிரொலி: குடிநீர் விநியோகம் திடீர் ரத்து
சென்னை ஆர்.கே.நகரில் கடந்த 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருந்த நிலையில் திடீரென அதிகளவிலான பணப்பட்டுவாடா குறித்த குற்றச்சாட்டு காரணமாக அங்கு தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இந்த நிலையில் தேர்தல் ரத்து என்ற அறிவிப்புக்கு முந்தைய நாள் வரை அந்த தொகுதி முழுவதும் தண்ணீர்கஷ்டம் என்றே என்னவென்று தெரியாத நிலை இருந்தது. ஆனால் தேர்தல் ரத்து என்ற செய்தி கிடைத்த அடுத்த நாள் முதல் அங்கு தண்ணீர் கஷ்டம் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியபோது, ‘ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் ரத்து என்ற அறிவிப்பு வந்தது, 10-ம் தேதியே ஆர்.கே.நகரின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
ஒரு சில பகுதிகளில் மட்டுமே குடிநீர் வினியோகம் ஓரளவுக்கு இருந்து வருவதாக கூறிய அந்த பகுதி மக்கள் ஆர்.கே.நகரில் உள்பகுதிகளில் குடிநீர் வினியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர். தேர்தல் அறிவித்த நாளில் இருந்து குடிநீர் வினியோகம் ஓரளவுக்கு சீராக இருந்ததாகவும், தேர்தல் ரத்து அறிவிப்புக்குப் பின்னர் தண்ணீர் இன்றி மக்கள் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது!