சென்னையை நோக்கி வரும் ‘மாருதா’ புயல். தண்ணீர் கஷ்டத்தை போக்குமா?
சென்னையை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலுக்கிய வர்தா புயலை அடுத்து தற்போது வங்கக் கடலில் மாருதா என்ற புயல் உருவாகியுள்ளதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாகவும், இதன் காரணமாக சென்னை, நாகை, கடலூர் , ராமேஸ்வரம் பாம்பன் பகுதிகளில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயலாக உருவெடுத்துள்ளதாகவும், இந்த புயலுக்கு ‘மாருதா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறுகையில், அந்தமான் அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி அது இப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மாருதா புயலாக உருவெடுத்துள்ளது. அந்தமானில் இருந்து மியான்மர் நோக்கி இந்த மாருதா புயல் நகர்ந்து வருகிறது என்று கூறினார்
சென்னையில் கடந்த சில நாட்களாக தண்ணீர்ப்பஞ்சம் தலைவிரித்து ஆடி வரும் நிலையில் இந்த புயலால் தண்ணீர் கஷ்டம் தீருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்