போர்தான் நிரந்தர தீர்வு என்றால் அதற்கும் தயார்! வடகொரியா அதிரடி
அமெரிக்க ராணுவம் சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு போட்டு தாக்குதல் நடத்திய நிலையில் விரைவில் வடகொரியாவுடன் போர் புரியவும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவுடன் போர் புரிய தயாராக உள்ளதாக வடகொரிய அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு பல ஆண்டுகளாக சிம்ம சொப்பனமாக இருந்துவரும் வடகொரியா மீது போர் தொடுக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளதாகவும், இதனை வடகொரியாவும் உணர்ந்துள்ளதோடு, அமெரிக்கா போர் தொடுத்தால், அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வடகொரியா முன்னாள் அதிபர் கிம் ஜாங் சன் அவர்களின் 105வது பிறந்தநாள் கொண்டாட்டம் வடகொரியாவில் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வடகொரிய ராணுவ வீரர்கள், கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகள் மற்றும் பல்வேறு போர்த்தளவாடங்கள் பங்கேற்ற பிரமாண்ட அணிவகுப்பும் நேற்று நிகழ்த்தப்பட்டது. இதனை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டார்.
அப்போது, கிம் ஜாங் உன்னுக்கு அடுத்தப்படியாக, அதிக அதிகாரம் மிகுந்த நபரான சோ ரியாங் நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், ‘’அமெரிக்கா போர் தொடுத்தால், அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். அணு ஆயுதங்களை வீசி, அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம். போர்தான் நிரந்தர தீர்வு என்றால், அதற்கு வடகொரியா எப்போதும் தயார்,’’ எனக் குறிப்பிட்டார்.