நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு
நீட் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், இளநிலை படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு (NEET) நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நாடு முழுவதும் பரவலாக இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. ஆனாலும், மருத்துவ நுழைவுத் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து நடப்பு கல்வியாண்டிற்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் 7-ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக மே 7ஆம் நடைபெறவுள்ள நீட் தேர்வை தள்ளி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே, நீட் பொது நுழைவுத் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தமிழக அரசு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மனிதவள மேம்பாடு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா திட்டவட்டமாக அறிவித்துள்ளார். திட்டமிட்டப்படி நடைபெறவுள்ள நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதுவது கட்டாயம் எனவும் அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.