அனைவருக்கும் நன்றி! விடை பெறுகிறாரா டிடிவி தினகரன்?
சசிகலா குடும்பம் இல்லாத அதிமுக உருவாகும், ஓபிஎஸ் அணியும் ஈபிஎஸ் அணியும் இணைந்து ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்கி இரட்டை இலையை மீட்போம் என்று நேற்று மூத்த அமைச்சர்களின் ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டது. எனவே தினகரன் கட்சியில் இருந்து ஒதுங்கி கொள்ள வேண்டும் என்று மறைமுகமாக முதல்வர் உள்பட அமைச்சர்கள் அனைவரும் எச்சரித்துள்ளதால் தினகரன் பின்வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி நாலாபுறமும் வழக்குகள் கழுத்தை இறுக்குவதால் சசிகலா நிலைமைதான் தனக்கும் ஏற்படும் என்பதை புரிந்து கொண்ட தினகரன் அரசியலில் இருந்தே வெளியேற முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சற்று முன்னர் தினகரன் தனது டுவிட்டரில், ‘எனக்கு இதுவரை ஒத்துழைப்பு நல்கிய கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் அதிமுகவில் இருந்து ஒதுங்கிக்கொள்வது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.