3 ஹெலிகாப்டர் தளம், 168 கார் பார்க்கிங், ஸ்நோ ரூம்… முகேஷ் அம்பானியின் பிரமாண்ட இல்லம்!
மும்பையில் ஒரு பிளாட் வாங்கிக் குடிபோறதுக்குள்ளயே பாதி உசுரு போயிடும். அதே மும்பையில ஒருவர் 27 மாடி கட்டி அதுல வாழ்க்கை நடத்துறாருனா அது அம்பானியாகத்தானே இருக்க முடியும்? ஆமா… நிச்சயமா அம்பானியேதான். தொழில் துறையில் தவிர்க்க முடியாத ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானிதான் இந்த பங்களாவுக்கு சொந்தக்காரர். திருபாய் அம்பானியின் மூத்த மகன். நேற்று அவருக்கு 60வது பிறந்த நாள். இவரது ரிலையன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கு மேல்.
அம்பானியின் 7 ஆயிரம் கோடி மதிப்புள்ள வீடு
குடியிருப்புகளில் விலை உயர்ந்ததாக லண்டனில் உள்ள ‘பக்கிங்ஹாம் பேலஸ்’ கருதப்படுகிறது. இது அரச குடும்பத்துக்கு சொந்தமானது. அதே வேளையில், தனி ஒருவருக்கு சொந்தமான பங்களாவாக உலகிலேயே அதிக விலை மதிப்பு கொண்டது முகேஷ் அம்பானியின் Antilia. இதுதான் இந்த பங்களாவின் பெயர். அட்லாண்டிக் கடலில் மாயமான தீவுப் பகுதியான அன்டில்லாவை நினைவுபடுத்தும் வகையில் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஜன நெருக்கடி மிகுத்த மும்பையில் பிளாட் வாழ்க்கைதான் நடுத்தர வர்க்கத்தினருக்கு வாய்க்கும். நகரத்தில் இருந்து 50 கி.மீ தொலைவில் வாங்கினாலே 60 லட்சத்துக்குக் குறைந்து வாங்க முடியாது. நிலத்தின் மதிப்பு மிக அதிகமாக உள்ள நகரின் மத்தியில் வான் உயர அடுக்கு மாடிகள் நிறைந்த பகுதியில் முகேஷ் அம்பானியின் ஆடம்பர பங்களா தனியாக நிற்கிறது. சிகாகோவைச் சேர்ந்த கட்டடக்கலை வடிவமைப்பு நிறுவனமான Perkins and Will இந்தக் கட்டடத்தை வடிவமைத்தது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Leighton Holdings நிறுவனம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டது. நிலத்தின் மதிப்போடு சேர்ந்து தற்போது இந்த பங்களாவின் மதிப்பு சுமார் ரூ. 7 ஆயிரம் கோடி.
உலகிலேயே அதிக விலை மதிப்பு கொண்ட ரெசிடென்சியல் பகுதியாகக் கருதப்படும் அல்டாமவுன்ட் சாலையில் இது அமைந்துள்ளது. சுமார் 40 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. 27 அடுக்குகளே இருந்தாலும் சில மாடிகள் மிக உயரமாகக் கட்டப்பட்டுள்ளன. அதனால், இந்த பங்களா கிட்டத்தட்ட 40 மாடிக் கட்டடத்துக்கு இணையான உயரம் கொண்டது. பங்களாவில் இல்லாத விஷயங்களே கிடையாது. மினி தியேட்டரில் 50 பேர் வரை அமர்ந்து படம் பார்க்கலாம்.
ஆசைப்பட்டா உடனே ஸ்விட்சர்லாந்துக்குப் போய் பனியில நனைய முடியுமா… மெனக்கெட்டு பிளைட் பிடிச்சுப் போகணும். அதுக்கு லேட் ஆகும். அதனால் வீட்டுக்குள்ளேயே ‘Snow Room’ இருக்கிறது. இந்த ‘Snow Room’ ஆள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பனியைக் கொட்டிக்கொண்டே இருக்கும். 168 கார்களை நிறுத்திக்கொள்ள முடியும். இதுதவிர 3 ஹெலிகாப்டர் தளங்களும் இருக்கின்றன. வீட்டு மொட்டை மாடியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் அம்பானியை யார் தடுத்து நிறுத்த முடியும்?
Antillaசிங்கிள் ஃபேமிலிதான் இந்த வீட்டுல வசிக்கிறார்கள். முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, மகள் இஷா, ஆகாஷ், ஆனந்த் ஆகியோர் அடங்கிய சின்ன குடும்பம்தான். 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஷிப்ட் முறையில் வீட்டில் பணியில் இருப்பார்கள். வீடு மட்டுமல்ல அம்பானி வைத்திருக்கும் ஒரு காரின் மதிப்பு மட்டும் ரூ. 8.5 கோடி. அந்த BMW 760Li ரக கார்தான் அம்பானிக்குப் பிடித்த வாகனம். இதன் உண்மையான மதிப்பு ரூ. 1.9 கோடிதான். ஆனால், முகேஷ் அம்பானிக்காக இந்த காரில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
குட்டி ராக்கெட் லாஞ்சரை ஏவினாலும் கூட இந்த காரின் கண்ணாடி உடையாது. ஒவ்வொரு கண்ணாடியும் 150 கிலோ எடையுடன் 65 மி.மீட்டர் தடிமன் கொண்டது.சுமார் 17 கிலோ எடை கொண்ட வெடிபொருட்கள் வெடிக்கச் செய்தாலும் கார் அசைந்து கொடுக்காது. இதன் பெட்ரோல் டேங்க் self-sealing Kevlar பாதுகாப்பு செய்யப்பட்டவை. அதனால், எளிதீல் தீ பிடிக்காது. இந்த காரைத் தவிர Maybach 62 and a Mercedes-Benz S Class ரக கார்களிலும் முகேஷ் அம்பானி பயணம் மேற்கொள்வார்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தற்போது முகேஷ் அம்பானியின் நிர்வாகத்தின் கீழ் இருக்கிறது. அண்மையில் டெலிகாம் துறையில் கால்பதித்து, ‘ஜியோ’ மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. ‘முகேஷ் அம்பானி மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவரது ரிஸ்க் எடுக்கும் தன்மையையும் திறமையும் யாருக்கு வரும்?’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். 1966ம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தை திருபாய் அம்பானி தொடங்கினார். ஆனாலும் 1970ம் ஆண்டு வரை திருபாய் அம்பானி குடும்பம் மும்பையில் இரு அறைகள் கொண்ட பிளாட்டில்தான் வசித்து வந்தது. திட்டமிடலும் உழைப்பும் அம்பானி குடும்பத்தை ‘அன்டில்லா’ கட்டிடம் போல உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது.