தமிழக அரசியலில் பாரதீய ஜனதா நுழைந்து சதுரங்கம் ஆடி வருகிறது. குஷ்பு
தமிழக அரசியல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஸ்திரத்தன்மை இல்லாமல் காணப்படுவதால் இதை பயன்படுத்தி பாரதிய ஜனதா தமிழகத்திற்குள் புகுந்துவிடலாம் என்று கணக்கு போடுவதாக பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. காங்கிரஸ் கட்சியும் இதே குற்றச்சாட்டை கடந்த சில மாதங்களாக கூறி வருகிறது. இந்த நிலையில் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித்தொடர்பாளருமான குஷ்பு இதுகுறித்து கூறியதாவது:
தமிழக அரசியலில் அ.தி.மு.க.வில் தற்போது 3 அணிகள் உருவாகி உள்ளன. மக்கள் ஜெயலலிதாவிற்குதான் வாக்களித்தார்கள். மற்றவர்களுக்கு இல்லை.
வரும்தேர்தலில் தொப்பிக்கும், விளக்குக்கும் வாக்களிக்க மாட்டார்கள். எம்.ஜி.ஆர். உருவாக்கிய இரட்டை இலைக்குத்தான் வாக்களிப்பார்கள். எனவே இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றவே, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணிகள் ஒன்று சேருகின்றன.
4 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதிலும் பணம் சம்பாதிப்பதிலும் தான் குறிக்கோளாக உள்ளனர். டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை பிரதமர் மோடியோ, முதல்வர் எடப்பாடியோ கண்டு கொள்ளவில்லை.
தமிழக அரசியலில் பாரதீய ஜனதா நுழைந்து சதுரங்கம் ஆடி வருகிறது. டெல்லியில் நடைபெறும் பல்வேறு போராட்டங்களையும், மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.
வங்காள தேசம் மற்றும் இலங்கைக்கு நிதியை வாரி வழங்கி வருகிறது. ஆனால் தமிழக, இந்திய விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
உத்திரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது போல் தமிழகத்திலும் ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள்.
கடந்த செப்டம்பர் 22-ந்தேதி அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஆஸ்பத்திரி சென்ற நாளில் இருந்து தமிழகத்தில் எந்த பணியிலும் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் கிடையாது. சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.
ஜனாதிபதி முன்பெல்லாம் அடிக்கடி தமிழகம் வருவதில்லை. ஆனால் தற்போது தமிழகத்திற்கு அடிக்கடி வருகிறார். ஆளுநர் ஆட்சி அமைப்பதற்கா? அல்லது வேறு காரணத்திற்கு வருகிறாரா? இவ்வாறு குஷ்பு கூறினார்.