சுக்மா நக்ஸல் தாக்குதல்: தமிழக வீரர்கள் 3 பேர் வீரமரணம்
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நிகழ்த்திய கொடூரமான தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படை வீரர்களில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் சிக்மா மாவட்டத்தின் தெற்கு பகுதி மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 74-வது பட்டாலியன் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று நண்பகல் சுமார் 12.25 மணியளவில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 74-வது பட்டாலியன் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள், வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்புப் படை வீரர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சிக்கி பாதுகாப்பு படை வீரர்கள் 25 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இந்நிலையில், நக்சல் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்கள் 25 வீரர்களின் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த செந்தில்குமார், அழகுபாண்டி, திருமுருகன் ஆகிய பாதுகாப்புப் படை வீரர்களும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.