வீடு வாங்க பி.எஃப். தொகையில் இருந்து 90 சதவீதம் எடுக்க சலுகை!
நடுத்தரவர்க்கத்தினருக்கு, சொந்த வீடு என்பது கனவு. போராடினாலும் பலருக்கும் கைகூடாத காரியம்தான். காலம் முழுக்கச் சேமித்தாலும் 45 வயதில் நகரத்தைவிட்டுப் பல கிலோமீட்டர் தாண்டிதான் ஃப்ளாட் ஒன்றை வாங்க முடியும். பணத்தைத் திரட்டுவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். மத்திய அரசு ஏற்கெனவே, ‘எல்லோருக்கும் வீடு’ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தது. மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு, அந்தத் திட்டம் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என மாற்றியமைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், இரண்டு கோடிக்கும் அதிகமான வீடுகளைக் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2022-ம் ஆண்டுக்குள் அனைவரும் சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பது இந்தத் திட்டத்தின் நோக்கம்.
திட்டத்தின் அடிப்படையில் நடுத்தரவர்க்கத்தினருக்கு உதவிடும் வகையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. வங்கிக்கடன்கள் எளிமையாக்கப்பட்டுள்ளன. வட்டிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளன. மாதச் சம்பளக்காரர்களுக்கு உதவிடும் வகையில் பி.ஃஎப். நிறுவனம் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இதற்கு முன்பு, ஐந்து ஆண்டுகள் பி.ஃஎப். பணம் பிடித்தம் செய்யப்பட்ட ஊழியர்கள், தங்கள் 36 மாத பி.ஃஎப். தொகையை வீடு வாங்குவதற்காக எடுத்துக்கொள்ளும் வசதி இருந்தது. வீடு கட்ட நிலம் வாங்குவதற்கு 24 மாத பி.ஃஎப் சேமிப்பைப் பெற்றுகொள்ளும் வசதியும் இருந்தது.
தற்போது, ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ் வீடு வாங்குவதற்கு, பி.ஃஎப் பணத்திலிருந்து 90 சதவிகிதத்தை எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தத் தொகையை எடுக்க, சில கட்டுப்பாடுகளை பி.ஃஎப் அலுவலகம் விதித்துள்ளது. அதன்படி, பி.ஃஎப் பயனாளர்கள் 10 பேர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இணைந்து ஒரு கூட்டுறவுச் சங்கம் உருவாக்க வேண்டும். அந்தச் சங்கம் முறைப்படி பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். அவர்களின் பி.எஃப். கணக்கு குறைந்தது மூன்று ஆண்டுகள் பிடித்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் அடிப்படையில் பி.ஃஎப். நிறுவனமே நிலம் வாங்குபவர்களிடம் அல்லது ஃபிளாட் வாங்குபவர்களிடம் நேரடியாகப் பணத்தைச் செலுத்தும்.
கட்டடம் கட்டும் தொழிலாளி
பயனாளர்களிடம் நேரடியாகத் தொகை வழங்காது. ஏப்ரல் 21-ம் தேதி முதல் இந்தச் சலுகை நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலம் ஓர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 10 பேர் கூட்டாகச் சேர்ந்து ஃபிளாட் வாங்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.ஏதாவது ஒரு காரணத்தினால் வீடு வழங்க முடியாமல்போனால், 15 நாள்களுக்குள் எடுத்த பணத்தை பி.ஃஎப் நிறுவனத்துக்குத் திருப்பிச் செலுத்திவிட வேண்டும்.
இதுகுறித்து தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பாண்டாரு தத்தாத்ரேயா கூறுகையில், ” இந்தத் திட்டத்தின்படி நான்கு கோடி பேர் பயனடைவார்கள். ஊழியர்கள் கூட்டாகச் சேர்ந்து வீடு வாங்கிக்கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தொழிலாளர்கள் கூட்டுறவு சொசைட்டியை உருவாக்கி இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஒவ்வோர் இந்தியரும் சொந்த வீட்டுக்குச் சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும் என்பது பிரதமரின் கனவு” என்றார்.