பாகுபலி 2′ படத்தின் தமிழ் பதிப்பிற்கு என்ன ஆச்சு? அதிர்ச்சியில் தமிழக ரசிகர்கள்
பாகுபலி-2 படத்தின் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டதற்கு, விநியோகஸ்தருக்கும், தயாரிப்பாளருக்கு இடையே உள்ள பணப்பிரச்சனை தான் காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய திரையுலகின் மெகா பட்ஜெட் திரைப்படமான பாகுபலி-2 திரைப்படம், உலகம் முழுவதும் சுமார் 8000 திரையரங்குகளில் இன்று வெளியாகிறது. பாகுபலி-2 படத்தின் தமிழ் பதிப்பு, தமிழகம் முழுவதும் உள்ள 800 தியேட்டர்களில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் காலை 11 மணிக்குத்தான் பாகுபலி-2 தமிழ் பதிப்பு வெளியிடப்பட உள்ளது. ஆனால் சென்னையில் உள்ள சில திரையரங்குகளில், ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப காலை 7 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த காட்சிக்கான டிக்கெட்டை வாங்கியிருந்த ரசிகர்கள், இன்று அதிகாலை தியேட்டர் வாசலில் கூடியிருந்தனர்.
இந்நிலையில் பாகுபலி-2 திரைப்படத்தின் தமிழ் பதிப்பு, கியூப் தொழில்நுட்பத்தில் பிரிண்ட் செய்யப்படாததால், காலை காட்சி ரத்து செய்யப்படுவதாக தியேட்டர் நிர்வாகிகள் அறிவித்தனர். இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
பாகுபலி-2 படத்தின் தமிழ் பதிப்பு கியூப் தொழில்நுட்பத்தில் பதிவேற்றம் செய்யப்படாததற்கு, படத்தின் தயாரிப்பாளருக்கும், தமிழக விநியோகஸ்தருக்கும் இருந்த பணப்பிரச்சனையே காரணம் என தெரியவந்துள்ளது.
பாகுபலி-2 படத்தின் தமிழ் பதிப்பின் விநியோகஸ்த உரிமையை பெற்றுள்ள ராஜராஜன் என்பவர், இன்னும் 15 கோடி வரை படத்தின் தயாரிப்பாளருக்கு கொடுக்க வேண்டி உள்ளது. நேற்று வரை அந்த பணம் தயாரிப்பாளருக்கு விநியோகஸ்தர் தரப்பிலிருந்து செலுத்தப்படாததால், பாகுபலி 2 படத்தின் தமிழ் பதிப்பு மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் தரப்பிற்கு தர வேண்டிய பணம், இன்று மதியத்திற்குள் செலுத்தப்பட்டுவிடும் என தமிழக விநியோகஸ்தர்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதால், பாகுபலி-2 படத்தின் தமிழ் பதிப்பு, இன்று மதியம் தமிழகத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பாகுபலி-2 படத்தின் தெலுங்கு பதிப்பு எந்த தடையுமின்றி, இன்று காலை சென்னையில் உள்ள சில தியேட்டர்களில் வெளியாக உள்ளது.