இந்திய ராணுவ வீரர்கள் கொலை எதிரொலி: 50 பாகிஸ்தான் பள்ளி மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் கொடூரமாக கொல்லப்பட்டதோடு அவர்களது உடல்களும் துண்டு துண்டாக பாகிஸ்தான் ராணுவத்தினர்களால் சிதைக்கப்பட்டது. இதற்கு இந்தியா தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, பாகிஸ்தான் தூதரையும் அழைத்து மத்திய அரசு கண்டித்தது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் லாகூர் நகரைச் சேர்ந்த 50 மாணவர்கள் ஏப்ரல் 1ஆம் தேதி இந்தியா வந்தனர். டெல்லி மற்றும் ஆக்ராவில் இவர்களுக்கான கலை நிகழ்ச்சிகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தது.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தான் மாணவர்களின் கலை நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என்று மத்திய அரசு தொண்டு நிறுவனத்திற்கு அறிவுறுத்தியதை அடுத்து 50 பாகிஸ்தான் மாணவர்களும் அவர்களுடன் வந்த ஆசிரியர்களும் திருப்பி அனுப்பப்பட்டதாக அந்த தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.