ஜெயிலில் மணப்பெண்! சிறைக்கு சென்று தாலி கட்டிய மாப்பிள்ளை
திருமணமாக வேண்டிய மணப்பெண் வழக்கு ஒன்றில் சிக்கி சிறையில் இருந்ததை அடுத்து, அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை சிறைக்கு உறவினர்களுடன் சென்று தாலி கட்டிய நூதன சம்பவம் ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் கோடா மாவட்டத்திற்கு உட்பட்ட கோலியஹைதி கிராமத்தைச் சேர்ந்தவர் 22வயது தேவ்கி மெஹரா. இவருக்கும் பாரான் நகரைச் சேர்ந்த மஹேஷ் மெஹரா என்பவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது.
இதனிடையே தேவ்கியின் சகோதரர் மனைவி உஷா தேவி திடீரென விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், வரதட்சணை பிரச்னை தொடர்பாக தற்கொலை செய்து கொண்டதாகவும் இந்த சம்பவம் குறித்து தேவ்கி மற்றும் அவரது தாயாரைப் போலீசார் கைது செய்து, கோடா மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தேவ்கி திருமண நாள் நெருங்கியதை அடுத்து சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் மணப்பெண் தேவ்கி மெஹ்ராவுக்கு மணமகன் சிறையிலேயே தாலி கட்டினார். இந்த வழக்கு முடிவுக்கு வந்த பின்னரே தம்பதிகள் ஒன்று சேர்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.