விருந்துக்குப் பிறகு மருந்து! – சொக்கு காபி

விருந்துக்குப் பிறகு மருந்து! – சொக்கு காபி

தீபாவளி விருந்து, பலகாரங்கள் என்று ஒரு பிடி பிடித்ததில் நாக்கும் வயிறும் அதிகம் வேலை செய்ததில் களைத்துப்போய் இருக்கும். சிலருக்கு வயிற்று உப்புசம், அஜீரணம் ஏற்பட்டு அவதிப்படுவார்கள். கடுத்திருக்கும் வயிற்றை இதப்படுத்த சில பத்திய உணவு வகைகளோடு வந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த மீனலோசனி பட்டாபிராமன். “பத்திய உணவு என்று சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். பக்குவத்துடன் செய்ய வேண்டும். அந்தக் காலத்தில் சமையல் திறமை பற்றித் தெரிந்துகொள்ள சுட்ட அப்பளம், வேப்பம்பூ ரசம், பருப்புத் துவையல் ஆகியவற்றைச் சரியான பதத்தில் செய்கிறார்களா என்று பார்ப்பார்களாம்” என்று விளக்கம் தருகிறார் அவர். தேர்ந்தெடுத்த சில பத்திய உணவு வகைகளைச் சமைக்கவும் இவர் கற்றுத் தருகிறார்.

சொக்கு காபி

இந்தக் காபியின் சுவையிலும் மருத்துவ நலன்களிலும் சொக்கிப்போய்விடுவீர்கள் என்பதால் சுக்கு காபியை சொக்கு காபி என்றே சொல்லலாம்.

என்னென்ன தேவை?

சுக்குப் பொடி – ஒரு டீஸ்பூன்

தனியா (பச்சை நிறம் நல்லது)

– ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகு – அரை டீஸ்பூன்

ஏலக்காய் – 1

கிராம்பு – 2

சோம்பு – அரை டீஸ்பூன்

துளசி இலைகள் – 10

பனங்கருப்பட்டி – சிறிதளவு

எப்படிச் செய்வது?

தனியாவை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளுங்கள். அதில் மிளகு, ஏலம், கிராம்பு சேர்த்து ஒரு புரட்டு புரட்டி அடுப்பை அணைத்துவிட்டு அந்தச் சூட்டிலேயே சுக்குப் பொடியைச் சேருங்கள். ஆறியதும் பொடித்துக்கொள்ளுங்கள். ஒரு தம்ளர் தண்ணீரைக் கொதிக்கவிட்டு அரைத்த பொடி ஒரு டீஸ்பூன், கொஞ்சம் துளசி இலை, பனங்கருப்பட்டித் தூள் ஆகியவற்றைச் சேருங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கி, வடிகட்டி, சூடாகப் பரிமாறுங்கள். பனங்கருப்பட்டி தனிச் சுவையைக் கொடுக்கும். கருப்பட்டி கிடைக்காவிட்டால் பனங்கல்கண்டு அல்லது வெல்லத்தைச் சேர்க்கலாம். விருப்பமானவர்கள் சூடான பால் கொஞ்சம் சேர்த்துப் பருகலாம். அஜீரணம், இருமல், ஜலதோஷம் அனைத்தையும் இது குணமாக்கும்.

Leave a Reply