கோடை விடுமுறை எதிரொலி: விமான கட்டணங்கள் அதிரடி குறைப்பு
பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியதை அடுத்து குடும்பத்துடன் கோடை விடுமுறையை கழிக்க சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் விமான நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு கோடை விடுமுறை சலுகையாக கட்டணங்களை குறைத்து வருவதால் விமான பயணங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இண்டிகோ விமான நிறுவனம் கடந்த 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 3 நாட்கள் கோடை விடுமுறை சிறப்பு டிக்கெட் விற்பனையை நடத்திய நிலையில் தற்போது ‘கோஏர்’ என்றா விமான நிறுவனமும் குறைந்த கட்டணத்தில் நேற்று முதல் தனது டிக்கெட் விற்பனையை தொடங்கியது.
சென்னையில் இருந்து ஐதராபாத், மும்பை, டெல்லி, கொச்சி, மதுரை போன்ற நகரங்களுக்கு குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் வகையில் டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது. இதன்மூலம் சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு கட்டணம் ரூ. 1000 முதல் ரூ. 2 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண குறைப்பு குறித்து டிராவல்ஸ் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: ‘இது விடுமுறையில் பயணம் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆகஸ்டு மாதம் வரை பயணம் செய்ய கட்டணம் குறைக்கப்பட்டிருப்பதன் மூலம் மக்கள் பெரிய அளவில் பயன் பெற முடியும், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அடுத்த மாதம் (ஜூன்) மத்தியில் திறக்கப்படஉள்ளது. அதனால் மக்கள் விடுமுறையை கொண்டாட அது ஏதுவாக இருக்கும். ஜம்மு-காஷ்மீர், இமாசலபிரதேசம், கோவா போன்ற பல மாநிலங்களுக்கு குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய முடியும்’ என்று கூறினார்.