குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனைக்கு தடை! சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் ஜாதவ் (வயது 46). இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் ‘ரா’ அமைப்பிற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாகவும், பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் அவர் மீது குற்றம் சாட்டியது.
இது தொடர்பான வழக்கில் குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு கடந்த மாதம் 10-ந் தேதி மரண தண்டனை விதித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த இந்திய அரசு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் ஐ.நா. அமைப்பின்கீழ் செயல்பட்டு வரும் சர்வதேச கோர்ட்டில் கடந்த 8-ந் தேதி வழக்கு தொடர்ந்தது. குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனையை பாகிஸ்தான் நிறைவேற்றிவிட்டதோ என்ற சந்தேகமும் எழுகிறது என்று இந்தியா கவலையும் தெரிவித்தது. இதனால், மரண தண்டனையை நிறுத்தி வைக்கும்படி சர்வதேச கோர்ட்டு பாகிஸ் தானுக்கு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில், இரு நாடுகளும் தங்களுடைய வாதத்தை சர்வதேச கோர்ட்டில் முன் வைத்தன.
இந்தியா வாதிடுகையில், “வியன்னா பிரகடனத்தை பாகிஸ்தான் மீறி இருக்கிறது. இதுபற்றி இந்திய தூதரகத்துக்கு தெரிவிக்கப்படவில்லை. எவ்வித ஆதாரமும் இன்றி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்து உள்ளது. அவரை உடனே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டது. பாகிஸ்தான் தரப்போ, “வியன்னா பிரகடனத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடுவதற்காக உளவு பார்ப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகத்தை அணுகுவது குறித்து எதுவும் கூறப்படவில்லை.
இந்த விவகாரத்தை பொறுத்தவரை சர்வதேச கோர்ட்டை இந்தியா அரசியல் மேடையாக்கிவிட்டது” என்று வாதிட்டது. இந்த வழக்கில், இரு தரப்பு வாதங்களும் கடந்த திங்கட்கிழமை முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தடை செய்து உத்தரவு
வியன்னா ஒப்பந்தப்படி இவ்விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்திற்கு சட்ட அதிகாரம் உள்ளது. சர்வதேச நீதிமன்றம் தலையிட கூடாது என்ற பாகிஸ்தான் வாதத்தை சர்வதேச நீதிமன்றம் நிராகரித்தது.
பாகிஸ்தான் சட்டத்தின்படி குல்பூஷண் ஜாதவ் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக 40 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம், ஆனால் இதுவரையில் அவரது தரப்பில் முறையீடு செய்யப்பட்டதா என்பது தெரியவரவில்லை. குல்பூஷண் ஜாதவின் தயாரின் முறையீடு மற்றும் மனுவானது பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது என இந்தியா தெரிவித்து உள்ளது.
வியன்னா ஒப்பந்தப்படி இந்தியா குல்பூஷண் ஜாதவ்வை சந்திக்க தூதரக அணுகுமுறைக்கு பாகிஸ்தான் அனுமதி வழங்க வேண்டும்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் குல்பூஷண் ஜாதவ் இந்திய குடிமகன் என்பதை உறுதி செய்து உள்ளன. வியன்னா மாநாட்டின் கீழ் இந்தியாவால் பெறப்பட்ட உரிமைகள் ஏற்கத்தக்கவை. இவ்விவகாரம் தொடர்பாக அடுத்தக்கட்ட உத்தரவு வரும் வரையில் பாகிஸ்தான் குல்பூஷண் ஜாதவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.