‘ஏசி’ பயன்பாட்டைத் தவிர்ப்பது எப்படி?
கோடையில் ‘ஏசி’(குளிர் சாதனம்) இல்லாமல் வீட்டில் இருக்கவே முடியாது என்ற நிலையில்தான் பல வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. ஆனால், ‘ஏசி’யைப் பயன்படுத்தினால் மின்சார செலவைக் கட்டுப்படுத்த முடியாமல் பலரும் திணறுகிறார்கள். இன்னொருபுறம், ‘ஏசி’ பயன்படுத்துவதால் ‘கார்பன்’ வெளியேற்றம் அதிகமாகி சுற்றுச் சூழலைப் பாதிக்கிறது. ‘ஏசி’ பயன்படுத்தாமல் கோடையைக் கடக்க ஏதாவது வழி இருக்காதா என்று யோசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. வீடு கட்டும்போதே ‘ஏசி’ பயன்பாட்டை எப்படித் தடுக்கலாம் என்பதைத் திட்டுமிட்டுவிட்டால் கோடையைச் சமாளிப்பது எளிமையாகிவிடும். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வீட்டைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் போதிய அளவுக்குக் காற்று வசதி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது. ‘ஏசி’ பயன்பாட்டைக் குறைப்பதற்கான பொதுவான வழிகள் சில:
காற்றோட்டம்
வீட்டில் எப்போதும் காற்றோட்டம் இருக்க வேண்டுமானால் அதற்கேற்ற அளவுக்கு ஜன்னல்களும் கதவுகளும் இருக்க வேண்டும். ஜன்னல்களைத் திறந்துவைப்பதால் வீட்டின் வெப்பநிலை இயல்பாகவே குறையும். ஜன்னல்களைத் தேர்ந்தெடுக்கும்போது பாரம்பரியமான கிராதி வைத்த ஜன்னல்களைத் தேர்ந்தெடுக்கலாம். இந்தக் கிராதிகள் சூரிய வெயிலைத் தடுத்து வீட்டில் காற்றோட்டத்தை அதிகரிக்கும்.
திரைச்சீலைகள்
ஜன்னல்களுக்குத் திரைச்சீலைகளைப் போடும்போது மரத்தாலான திரைச்சீலைகளைப் பயன்படுத்துவது காற்றோட்டத்தை இயல்பாக அனுமதிக்கும். ஒருவேளை, ஜன்னல் பெரிதாக இருந்தால் திரைச்சீலைகளை இரண்டாகப் பிரித்து பயன்படுத்திக்கொள்ளலாம். வீட்டின் வெளிச்சத்துக்கு ஏற்றபடி திரைச்சீலைகளை மாற்றி அமைத்துக்கொள்ள இது உதவும். மரத்தாலான திரைச்சீலைகளுக்குப் பதிலாக கோரப்புற்களால் வேயப்பட்ட திரைச்சீலைகளையும் பயன்படுத்தலாம்.
‘ஏர் கூலர்’ பயன்படுத்தலாம்
‘ஏசி’க்குப் பதிலாக ‘ஏர் கூலரைப்’ பயன்படுத்துவது மின்சார செலவைப் பெருமளவு குறைக்கும். ஆனால், இந்த ‘ஏர் கூலர்’ வறண்ட காலநிலையைக் கொண்ட இடங்களுக்குத்தான் ஏற்றது. இந்தியாவில் வடக்குப் பகுதிகளிலும் மேற்குப் பகுதிகளிலும் இதைப் பயன்படுத்தலாம். ஆனால், ‘ஏர் கூலர்’ வாங்குவதற்கு முன்னால் அவற்றின் இரைச்சல் அளவைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது. இரைச்சல் குறைவாக இருக்கும் ‘ஏர் கூலர்களும்’ இப்போது சந்தையில் வந்துவிட்டன.
நீர் நிலை அமைக்கலாம்
வீட்டில் இடவசதியிருந்தால் ஒரு சிறிய நீர்நிலையை உட்புற முற்றத்தில் அமைக்கலாம். வீட்டுக்குள் நீர்நிலை இருப்பது காற்றைக் குளுமையாக்கும். இப்போது வீட்டுக்குள் நீர்நிலை அமைக்கும் இந்தப் போக்கு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. ஒருவேளை, நீர்நிலை அமைக்கும் அளவுக்கு இடமில்லையென்றால் பால்கனியில் சிறிய நீரூற்று அமைக்கலாம். அப்படியில்லாவிட்டால் அலங்கார மட்பாண்டங்களில் தண்ணீர் அமைக்கலாம். ஆனால், வீட்டுக்குள் நீர்நிலையை அமைக்கும்போது அதைச் சரியான இடைவெளியில் பராமரிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அது வீட்டுக்குள் கொசுக்கள் உற்பத்தியாகக் காரணமாக அமைந்துவிடும்.
குளுமையான தரைத்தளம்
கோடைக்காலத்தில் வீட்டிலிருக்கும் தரைவிரிப்புகளை அகற்றிவிடுவது நல்லது. இந்தத் தரைவிரிப்புகளுக்கு வீட்டின் வெப்பநிலையை அதிகரிக்கும் தன்மை உண்டு. அத்துடன், தரைத்தளத்தை அமைக்க இயற்கையான கற்களான பளிங்கு, கிரானைட் போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இந்தக் கற்கள் இந்திய தட்பவெப்பநிலைக்கு ஏற்றவை. வீட்டின் வெப்பநிலையை அதிகரிக்காமல் இந்த இயற்கையான கற்கள் பார்த்துக்கொள்ளும். ஒருவேளை, தரைவிரிப்புகள் பயன்படுத்தவேண்டுமானால் நாணல், சணல் போன்ற பொருட்களால் செய்யப் பட்ட தரைவிரிப்புகளைப் பயன்படுத்தலாம். இவை வெப்பத்தை அதிகமாக உறியாது.
வீட்டுக்குள் செடிகள்
வீட்டைச் சுற்றி மரங்கள் வளர்க்க முடியாவிட்டாலும் வீட்டுக்குள் எவ்வளவு செடிகள் வளர்க்க முடியுமோ அவ்வளவு செடிகள் வளர்க்கலாம். ஜன்னல்கள், கதவுகள், பால்கனிகள் போன்றவை வீட்டுக்குள் செடிகள் வளர்க்க ஏற்ற இடங்கள். வீட்டுக்குள் கொடிகளாகப் படரும் செடிகளை வளர்ப்பது பொருத்தமானதாக இருக்கும்.
‘எல்இடி’ விளக்குகள்
வீட்டில் ‘எல்இடி’ விளக்குகளைப் பயன்படுத்துவது வீட்டுக்குள் நிலவும் வெப்பநிலையைக் குறைக்க கணிசமான அளவு உதவும். அத்துடன், இந்த விளக்குகள் மின்சார செலவையும் குறிப்பிட்ட அளவு குறைக்கும். இந்த விளக்குகளில் கார்பன் வெளியேற்றமும் குறைவு என்பதால் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்கின்றன.