குழந்தைகளை நெருங்கும் ஆபத்துகள்

குழந்தைகளை நெருங்கும் ஆபத்துகள்

நேரடியான பாலியல் உறவைத் தாண்டியும் குழந்தைகள் பலவிதங்களில் பாலியல் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அது பல நேரங்களில் பெற்றோருக்குத் தெரியாமலே இருக்கக்கூடும்.அந்தரங்க உறுப்புகளைத் தொடுவது மற்றும் தொடச் செய்வது, குழந்தைகளின் அறைக்குள் அத்துமீறி நுழைவது, குழந்தைகள் ஆடையில்லாமல் இருக்கும்போது மறைந்திருந்து பார்ப்பது, வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பது, சீக்ரெட் கேம் விளையாடலாம் என அழைத்து, இருவருக்குமான விஷயங்களை மற்றவரிடம் சொல்ல அனுமதிக்காமல் சூழ்ச்சி செய்வது போன்ற அனைத்துமே பாலியல் அத்துமீறல்கள்தான்.

குழந்தைகளிடம் நெருக்கமாகப் பழகுவோர் அனைவரையும் பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சந்தேகம் இருப்பின், குழந்தைகளிடம் புரியும் வகையில் பேசி, குறிப்பிட்ட அந்த நபர் எப்படிப் பழகுகிறார் எனத் தெரிந்துகொள்ளலாம். பரிசுப் பொருள்களை வாங்கிக்கொடுத்து குழந்தைகளைக் கவருவது, பெற்றோரைவிட அதிக உரிமை எடுப்பது, குழந்தைகளை விளையாடவிடாமல் தனிமைப்படுத்துவது, குழந்தைகளைக் குற்றவாளிகள் எனப் பட்டம்கட்டி பெற்றோரிடம், ‘நான் உங்கள் குழந்தையைத் திருத்துகிறேன்’ என்று நடிப்பதுபோன்ற செயல்களைச் செய்பவரிடம் கவனத்துடன் இருங்கள்.

படித்தவர்கள், பெரிய பதவியில் இருப்பவர்கள், கௌரவமான குடும்பத்தில் இருப்பவர்கள், வயதானவர்கள் போன்ற அடையாளங்களை மட்டுமே நம்பி, அவர்கள் மீது அதீத நம்பிக்கைகொள்வது தவறு. நல்லவர், எனக்கு மிகவும் நன்கு தெரிந்தவர், நம்பிக்கையானவர் என்று யாரிடமும் குழந்தைகளை ஒப்படைக்கக் கூடாது.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் புரியும் வகையில் பாலியல் விழிப்பு உணர்வை சொல்லித்தரலாம். கார்ட்டூன் படங்களின் மூலமாகவோ, புத்தகங்களின் மூலமாகவோ இதைச் சொல்லித்தரலாம்.

பாதுகாப்பான தொடுதலைத் தவிர வேறு காரணங்களுக்குத் மறைவிடங்களை தொடுவது சரியல்ல என்று புரியவையுங்கள். தொடுதலில் அசௌகரியமாக உணர்ந்தால், குழந்தை அதைத் தடுக்கும் வகையில் சொல்லித்தர வேண்டும். பொதுவாகப் பாலியல் கொடுமைகள் மறைவான இடத்தில் நடக்கும். தவறாக எவரேனும் நடந்துகொண்டால், உடனே சத்தம் போடு, கத்து எனச் சொல்லித்தரலாம்.

சிலர் பரிசு, காசு, இனிப்பு கொடுத்து ஏமாற்றி, அவர்கள் சொல்கிறபடி நடக்கவைப்பார்கள். அப்போது சங்கடமான, குழப்பமான, பாதுகாப்பு இல்லாத மாதிரி உணர்ந்தால், அவர்கள் சொல்வதைச் செய்யக் கூடாது. அவர்கள் கொடுப்பதையும் வாங்கக் கூடாது என்பதைத் திரும்பத் திரும்ப சொல்லித்தர வேண்டும்.
சுற்றியிருப்பவர்கள் மீது அவநம்பிக்கை வரும் விதத்தில் இல்லாமல், பாசிட்டிவாக, எதார்த்தமாக இவற்றைச் சொல்லித் தர வேண்டும்.

Leave a Reply