சப்பணமிட்டுச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
சப்பளங்கால் போட்டுத் தரையில உட்கார்ந்து சாப்பிடுப்பா!’ – உணவு வேளைகளில் பெரியவர்கள் தவறாமல் சொல்லும் அறிவுரை. அதன் அருமையும் அர்த்தமும் புரிந்திருந்தால், இன்று நாம் டைனிங்டேபிளிலோ, சோஃபாவில் கால் மீது கால் போட்டுக்கொண்டோ சாப்பிட்டுக் கொண்டிருக்க மாட்டோம்.
இத்தனைக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுத்துத்தான் சாப்பிடுகிறோம். ஆனாலும், உடல் உபாதைகள் வருகின்றன. காரணம், தரையில் அமராமல் கண்டபடி அமர்ந்து சாப்பிடும் முறையினால். தரையில் அமர்வதே ஒரு வகை யோகாதான். செங்குத் தாக முதுகுத் தண்டு நிமிர்ந்து நிற்க, கால்களும் தொடைகளும் எவ்வளவு விரிவான இடத்தை அடைக்க முடியுமோ அப்படி அடைத்துக் கொள்ளும்படி அமர்ந்திருப்போம். சப்பணமிட்டுச் சாப்பிடுவதில் பலன்கள் எக்கச்சக்கம்!
செரிமானம் சீராகும்
தரையில் அமர்ந்து சாப்பிடும்போது, இயல்பாகவே முன்பக்கமாக வளைந்தும், உணவை விழுங்கும்போது நிமிர்ந்தும் சாப்பிடுவோம். இப்படி முன்னும் பின்னும் அசைவதால், அடிவயிற்றில் உள்ள தசைகளின் இயக்கம் சிறப்பாக இயங்கும்.
எடை குறையும்
தரையில் உட்கார்ந்து சாப்பிடும்போது, கவனம் எங்கும் சிதறாமல், உணவின் மீதும் நாம் சாப்பிடும் அளவின் மீதும் மட்டுமே இருக்கும். `வயிறு நிறைந்தது’ என்ற உணர்வை மூளைக்கும் வயிற்றுக்கும் சிக்னல் கொடுக்கப் போதுமான அவகாசம் கிடைக்கும். அளவு தெரியாமல், அதிகமாகச் சாப்பிட மாட்டோம். இது, உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும்.
ஆயுள் கூடும்:
தரையில் அமர்வது சற்று சிரமமாக இருக்கலாம். கால்கள் மரத்துப் போனதுபோலக்கூடத் தோன்றும். கால் நரம்புகளின் வலிமையின்மையே இதற்கு முதல் காரணம். நரம்புகள் நன்கு வலிமையாக இருந்தால், ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுவதில்லை. எவ்வளவு மடங்கினாலும் மெதுவாக ரத்தம் உடம்பின் கீழ்ப் பகுதிக்குச் செல்லும். நரம்புகள் வலிமைபெற பெரியவர்கள் பரிந்துரைத்தது பத்மாசனம் என்னும் யோகா. இதை அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே, `தரையில் அமர்ந்து சாப்பிட வேண்டும்’ என்றார்கள். இது நோயின்றி நீண்ட நாள் வாழ உதவும்.
தரையில் கால்களை மடக்கி, தோள்களை நிமிர்த்தி உட்காரும்போது, நம் முதுகுத்தண்டு வலுப்பெறுகிறது. இது, இடுப்புவலியால் அவதிப்படுபவர்களுக்குச் சிறந்த தீர்வு தரும். அதுமட்டுமல்ல , சாப்பிடும் போது நம் அசைவுகளே மூட்டுப் பகுதிகளுக்குச் சிறந்த பயிற்சியாக அமையும். வாதம் மற்றும் ஆஸ்டியோபொரோசிஸ் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும்