இந்தோ-சாரசெனிக் கலையும் சென்னையும்
சென்னை பாரம்பரியமான கட்டிடங்களுக்குப் பெயர் போன ஊர். சென்னை நகரத்தின் முக்கியமான சாலைகளைக் கடந்து செல்லும்போது இந்தப் பிரம்மாண்டமான கட்டிடங்களைப் பார்க்க முடியும். முக்கியமாக உழைப்பாளர் சிலைக்கு எதிரே உள்ள எழிலகம் அரசு அலுவலக வளாகத்துக்குப் பின்புறம் உள்ள சேப்பாக்கம் அரண்மனை, சென்னை உயர் நீதி மன்றக் கட்டிடம் போன்றவற்றைச் சொல்லலாம்.
பெரிய குவி மாடத்துடனான இந்தக் கட்டிடங்களைப் பார்த்து வியந்து பார்த்திருப்போம். ஆனால் இந்தக் கட்டிடங்கள் எல்லாம் எந்தக் கட்டிடக் கலையின் அடிப்படையில் கட்டப்பட்டன என்று யோசித்திருப்போமா? அந்தக் கட்டிடங்கள் எல்லாம் இந்தோ – சாரசெனிக் கட்டுமானம்.
19, 20-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டுமானங்கள் பெறும்பாலும் இந்த கலையை சேர்ந்தவை. உயர்ந்த கோபுரங்கள், குவிமாடங்கள் இஸ்லாமிய கலையம்சத்தையும், கட்டிடங்களில் முனைகளில் அழகான பூ போன்ற வேலைப்பாடுகள், அழகான வேலைப்பாடுகள் உள்ள விதானமும் கொண்டவை. சென்னை மட்டுமின்றி டெல்லி தலைமைச் செயலகக் கட்டிடம், மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையக் கட்டிடம் போன்று பல இடங்களில் இது போன்ற கட்டுமானத்தைப் பார்க்கலாம். குவிமாடங்கள் அமைந்த கட்டிடங்கள் சிறப்பு பெற்றவைகளாகவே திகழ்கின்றன.மேலும் இது போன்ற கட்டிடங்களில் உருவங்களும் செதுக்கப்படும். சாதாரண ஜன்னல்போல் இல்லாமல் கற்கலாலே வடிவமைக்கப்பட்டிருக்கும். தூண்களை அதிகம் காணமுடியும். அதில்தான் பெரும்பாலும் வேலைப்படுகள் அமைந்திருக்கும்.
இந்தக் கட்டிடக் கலைக்கும் சென்னைக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. இந்தோ-சாரசெனிக் கட்டுமான முறையில் அதிகமான கட்டிடங்கள் உள்ள நகரம் சென்னையாகத்தான் இருக்கும். மேலும் இந்தக் கட்டுமானக் கலையின் முதல் கட்டிடம் சென்னையில்தான் கட்டப்பட்டது. ஆற்காடு நாவபின் அரண்மனையான சேப்பாக்கம் அரண்மனைதான் அந்தக் கட்டிடம். 117 ஏக்கரில் கொண்ட இந்த மாளிகை 1768-ம் ஆண்டு கட்டப்பட்டது. இது மட்டுமல்லாது, சென்னை உயர் நீதிமன்றக் கட்டிடம், சென்னைப் பல்கலைக்கழக செனட் இல்லக் கட்டிடம், சென்னை எழும்பூர் ரயில் நிலையம், விக்டோரிய பப்ளிக் ஹால் ஆகியவை இந்தக் பாணியில் கட்டப்பட்டதில் முக்கியமான கட்டிடங்கள்.