மழை நீரை சேமிக்கலாமா?
தமிழகத்தில் இப்போது இதுவரை இல்லாத அளவுக்குக் கடும் வறட்சி. தண்ணீருக்குப் பஞ்சம் வரும் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் ஆங்காங்கே கோடை மழை கொட்டுகிறது. மழையை வேடிக்கை பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறோம். ஆனால் அத்துடன் நாம் நின்றுவிடுவது முறையல்ல. அந்த மழை நீர் எல்லாம் வீணாகப் போவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மழை நீரை நாம் சரிவர சேமிக்கிறோமா, நாம் அவற்றில் எவ்வளவு நீரைச் சேமித்தோம்..?
உதாரணமாக நம் வீட்டில் நூறு சதுர அடி இடத்தில், 1100 மி.மி. மழை பெய்தால் 1 ,10 ,000 லிட்டர் மழை நீரைச் சேமிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. நூறு சதுர அடியிலேயே இவ்வளவு நீர் என்றால் ஆயிரம் சதுர அடியில் எவ்வளவு மழை நீரைச் சேமிக்கலாம் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்தக் கணக்கை உணர்ந்துதான் அன்றே காரைக்குடி போன்ற ஊர்களில் நகரத்தார் தங்கள் வீடுகளில் துளி மழை நீரையும் வீணாக்காமல் மழை நீர் சேமிப்பு வசதிகளை வடிவமைத்து உள்ளனர்.
மழை நீர் சேமிப்பு இரு வகைப்படும். முதலாவதாக , நம் வீட்டு ஆழ் துளைக் குழாயிலிருந்து மூன்றடி தூரத்தில் சுமார் மூன்றடி விட்டமுள்ள, நான்கடி ஆழமுள்ள உள்ள குழி தோண்டி, அதில் கூழாங்கற்களையும் , ஆற்று மணலையும் ஒவ்வொரு அடுக்ககாக மாறிமாறி இட்டு, அந்த குழிக்குள் மழை நீரை சேகரித்து வரும் குழாயை அதனுள் செலுத்தலாம். இந்த முறையின் மூலம், அவ்வப்போது சேகரிக்கும் மழை நீர் பூமிக்குள் சென்று , நீர் ஊற்றை வற்றாமல் இருக்கச் செய்யும்.
இரண்டாவது முறை பெரிய வீடுகளுக்கு மட்டுமே உகந்தது. மொட்டை மாடி, மற்றும் கூரையின் மேல் விழும் மழை நீரை, குழாய்கள் மூலம் சேகரித்து பெரிய தொட்டியில் சேர்த்தோ அல்லது கிணறு இருந்தால் கிணற்றுக்குள் செலுத்தவும் செய்யலாம். நெரிசலான கட்டடங்கள், மண் தரையை மறைத்த சிமெண்ட் பிளாக்குகள் இவற்றைக் கொண்டு மழைக்கு நாமே குடை பிடித்துவிடுகிறோம். வீட்டைக் கட்டிப்பார் என்ற கூற்றில் இனி மழை நீரைச் சேமித்துப்பார் என்றும் நாம் முக்கியத்துவம் கொடுக்கலாமே..?