தீபாவளிக்குள் மீண்டும் அதே இடத்தில் சென்னை சில்க்ஸ். கடை உரிமையாளர் உறுதி
சமீபத்தில் பயங்கர தீ விபத்துக்கு உள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் இடிபாடுகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. இன்னும் இரண்டு நாளில் இந்த கட்டிடம் முற்றிலும் இடிக்கப்பட்டு அடுத்த சில நாட்களில் இடிபாடுகள் அனைத்தும் முற்றிலும் அகற்றப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கட்டிடம் இடிக்கும் பணி முடிவடைந்ததும் மீண்டும் அதே இடத்தில் புதுப்பொலிவுடன் சென்னை சில்க்ஸ் கட்டிடம் அரசின் உரிய அனுமதியுடன் கட்டப்படும் என்று சென்னை சில்க்ஸ் உரிமையாளர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை சில்க்ஸ் மேனேஜிங் டைரக்டர் மாணிக்கம் கூறியபோது, ‘ ‘விபத்தில் சிக்கிய கட்டிடம் தெரிந்தே விதிகளை மீறி கட்டப்படவில்லை. விதிமீறல் பற்றி எங்கள் கவனத்திற்கு வந்த போது, தீயணைப்பு வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மேலும் கட்டிடம் இடிக்கப்பட்ட பின், அதே இடத்தில், அரசு விதிமுறைகளை பின்பற்றி, புதிய சென்னை சில்க்ஸ் கட்டிடம் கட்டப்படும்’ என்று கூறினார்
அதேபோல் குமரன் தங்க மாளிகையில் நகைச்சீட்டு பணம் கட்டிய அனைவருக்கும் கடை திறந்த பின்னர் அவர்கள் கட்டிய தொகைக்கு உரிய நகை தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.