உங்களை எழிலாக்கும் உறுதியாக்கும்… 8 எளிய வழிமுறைகள்!
பெண்களைப் பொறுத்தவரை நெட்டையோ, குட்டையோ, கறுப்போ, சிவப்போ, குண்டோ, ஒல்லியோ… எல்லாமே அழகுதான்! ஒவ்வொரு பெண்ணும் தனிப்பட்டமுறையில் அழகுதான் என்பதை மனதில் பதியவைத்துக்கொள்ள வேண்டும். `எந்த வகையிலும் நான் யாருக்கும் சளைத்தவள் அல்ல’ என்ற எண்ணம் இருக்க வேண்டும். அழகாக இருப்பதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அழகைப் பின்னேவைத்து ஆரோக்கியத்தை முன்னேவைத்து வாழ்வோம்! ஆரோக்கியமான உடல் அமைப்பைப் பெற சில மெனக்கெடல்கள் தேவைப்படுகின்றன. அவை பற்றிப் பார்ப்போம்.
தூக்கம் அவசியம்!
ஆரோக்கியமான உடலுக்கு, சராசரியாக எட்டு மணி நேர தூக்கம் என்பது அத்தியாவசியமானது. அதிலும் பெண்களுக்கு 8-10 மணிநேரம் வரை தூக்கம் கண்டிப்பாகத் தேவை. முந்தைய நாள் இரவில் அமைதியான தூக்கம் இல்லையென்றால் கண்கள், முகம் என அனைத்திலும் சோர்வு தென்படும். இது அடுத்த நாள் வேலைகளில் சரியாகக் கவனம் செலுத்த முடியாமல் போவதற்குக் காரணமாகிவிடும். சிறந்த உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியக் காரணி தூக்கம். ஆகவே, தூக்க நேரத்தை குறைத்துக்கொண்டு எந்த வேலையிலும் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
டானிங்-ஐ தவிர்க்க வேண்டும்!
பெரும்பாலானோர் வெயிலில் செல்லும்போது சன் ஸ்க்ரீன் லோஷன் அல்லது முகத்தைத் துணியால் மூடியபடி செல்வதே இல்லை. தோலானது வெயிலில் நேரடியாக படும்போது பர்ன் ஆகும். இதனால் இயல்பாக இருக்கும் நிறத்தில் இருந்து தோல் கறுத்துவிடும். மேலும், தொடர்ந்து வெகு நேரம் அல்லது நீண்ட நாள் சூரிய ஒளியில் தோல் பகுதியை வெளிக்காட்டுவதால், தோல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளதென்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, முடிந்த வரை சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
வொர்க்அவுட் செய்யுங்கள்!
உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொள்வது உடலைக் குறைப்பதற்காக அல்ல; ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தினமும் 20 நிமிடங்கள் வரை யோகா பயிற்சி அல்லது ஏதேனும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமான தேகத்துக்கு வழிவகுக்கும்.
ஆரோக்கியம் அவசியம்!
ஒல்லியாக இருப்பதும் ஆரோக்கியமாக இருப்பதும் வேறு வேறு! ஒல்லியாக இருப்பதைவிட எனர்ஜெடிக் ஆக, வலிமையாக, ஆரோக்கியமாக இருப்பதுதான் மிகவும் அவசியம். பருமனாக இருப்பவர்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என நினைத்து, இருக்கும் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது.
தண்ணீர் அவசியம்!
உடலின் சீரான செயல்பாட்டுக்குத் தேவையான அளவு தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியம். மனித உடல் 70 சதவிகிதம் தண்ணீரால் ஆனதே. எனவே தினமும் எட்டு டம்ளர் அல்லது 2 – 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது உடலை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியோடும் வைத்திருக்க உதவும். இதன் மூலம் உடலை டீஹைட்ரேட் ஆகாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
இன்ஸ்டன்ட் டயட் தவிருங்கள்!
பேலியோ, வேகன், லோ-கார்ப் போன்ற டயட்களை கடைப்பிடித்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் உடல் எடையைக் குறைத்துவிட வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எண்ணமாக உள்ளது. இது போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் தவறான ஒன்று. உடல் எடையைக் குறைக்க, இத்தகைய இன்ஸ்டன்ட் டயட்களை மேற்கொள்வதால் உடலின் வழக்கமான செயல்முறை தடைப்படுவதோடு உடல் ஆரோக்கியம் இழந்து, மெலிந்து போகும்.
காலை உணவு கட்டாயம்!
இன்றைக்கு வேலைக்குச் செல்லும் பெரும்பாலான பெண்களிடம் இருக்கும் பொதுவான பழக்கம், காலை உணவைத் தவிர்ப்பது. நேரமின்மை, அசதி, பசியின்மை எனப் பல காரணங்களால் பலரும் காலையில் உணவு உண்பதில்லை. உண்மையில், இது மிகவும் ஆபத்தான பழக்கம். இதனால் உடலின் மெட்டபாலிசம் கெட்டுப்போய்விடும். ஆகவே, முடிந்த வரை காலை உணவைத் தவிர்க்காமல், ஏதேனும் ஒரு பழம் அல்லது பழச்சாறு அருந்த வேண்டும்.
உடலுக்கு வேலை கொடுங்கள்!
வேலைக்குச் செல்லும் பெண்களும், வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகளும் சமையல் வேலை மற்றும் வீட்டு வேலைகள் முடிந்ததும் பல மணி நேரம் தூங்கிவிடுகிறார்கள். இதனால், உடல் அசைவற்று இருப்பதோடு கலோரியும் கரையாமல் தங்கிவிடுகிறது. இதுவே உடல் பருமனாவதற்குக் காரணம். எனவே, ஏதேனும் ஒரு வேலையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.