முதுநிலை படிப்பு படித்தால்தான் வருங்காலத்தில் ஐடி வேலை: மோகன்தாஸ் பாய் கருத்து
தகவல் தொழில்நுட்பத் (ஐடி) துறையில் வரும் காலத்தில் முதுநிலை படிப்பு முடித்தால் மட்டுமே வேலை கிடைக்கும் சூழல் உருவாகும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்கு நரும் கல்வி ஆராய்ச்சி யாளருமான மோகன்தாஸ் பாய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது: வரும் காலத்தில் பி.டெக் படிப்பு முடித்துவிட்டு வரும் இளைஞர்கள் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிக்கு சேருவது கடினம். எம்டெக் அல்லது எம்எஸ் போன்ற முதுநிலை படிப்பை முடித்துவிட்டு வருவபர்களுக்கே ஐடி நிறுவனங்கள் பணியில் எடுப்பதற்கு முன்னுரிமை வழங்கும். நல்ல பணியில் சேர்வதற்கு பிடெக் போதுமானது அல்ல. மாறாக எம்டெக் படிப்பில் ஏதாவது ஒரு துறையில் சிறப்புத் தகுதியுடன் இளைஞர்கள் வெளிவர வேண்டும். கோடிங் முறையை கற்றுக் கொள்ளுங்கள். சிறப்பு வகுப்புகளுக்குச் சென்று கோடிங்கை நீங்களாக எழுதி பழகுங்கள். ஏனெனில் முக்கிய ஐடி நிறுவனங்கள் உங்களது கோடிங் எழுதும் அறிவை வைத்தே பணிக்கு எடுக்கின்றன.
இளைஞர்களை பணிக்கு எடுத்து பிறகு ஆறு மாதம் பயிற்சி வழங்கி அதற்கான சம்பளமும் கொடுப்பதற்கு தற்போது நிறுவனங்கள் தயாராக இல்லை. மேலும் நேரம் விரயம் ஆவதையும் நிறுவனங்கள் தற்போது விரும்புவதில்லை. நிறுவனங்கள் பணிக்கு தேர்வு செய்யும் போதே உங்களது கோடிங் அறிவை வைத்து தேர்வு செய்கிறார்கள்.
ஐடி துறையில் புதிதாக பணிக்கு சேருபவர்களுக்கான ஊதியம் உயர்த்தப்படாமல் இருப்பது வருத்தத்துக்கு உரியது. ஏனெனில் ஒட்டுமொத்தமாக ஐடி துறை மிக வேகமாக வளர்ச்சி பெறவில்லை. இந்த காரணத்தால்தான் ஊதியம் உயர்த்தப்படாமல் இருக்கிறது. மேலும் இந்த ஆண்டில் ஐடி துறையில் 1.5 லட்சம் முதல் 1.6 லட்சம் ஊழியர்களை புதிதாக பணிக்கு எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். எந்தவொரு நாட்டிலும் ஆண்டுதோறும் 10 லட்சம் இன்ஜினீயர்கள் உருவாகவில்லை. ஏன் சீனாவில் கூட இவ்வளவு இன்ஜினீயர்கள் உருவாகவில்லை. இவர்கள் அனைவருக்கும் வேலை தருவது சவாலான காரியம்.
ஐடி துறையில் அதிக வேலை இழப்பு ஏற்படுகிறது என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. இதை நினைத்து மக்கள் கவலை அடை கின்றனர். ஆனால் ஐடி துறை எந்தவொரு சிக்கலான சூழ் நிலையை சந்தித்துவரவில்லை. இது ஒவ்வொரு ஆண்டும் நடக்கக்கூடிய நிகழ்வே. ஆண்டுதோறும் சரியாக செயல்படாத 1 முதல் 2 சதவீதம் ஊழியர்களை பணியிலிருந்து விலகி கொள்ளுமாறு கேட்பது இயல்பானது என்று மோகன் தாஸ் பாய் தெரிவித்தார்.