மலேசியாவில் நுழைய வைகோவுக்கு தடை! ‘புலி’ ஆதரவாளர் என்பதால் அதிரடி நடவடிக்கை
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமியின் மகள் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மலேசியா சென்றார். ஆனால் கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவரை மறித்த மலேசிய போலீசார் உங்களுக்கு மலேசியாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் நீங்கள் மலேசியாவிற்குள் நுழைய முடியாது என்றும் கூறி அவரை தடுத்தனர்.
விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் வைகோ என்பதால் அவரது பெயர் மலேசியாவின் ஆபத்தானவர்களின் பட்டியலில் உள்ளது. இதனால் வைகோவை தடுத்து நிறுத்திய போலீசார், அவரது பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்த விசாரணை முடிந்தவுடன் இன்று இரவு அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வைகோவை மலேசியாவிற்குள் நுழைய விடாமல் தடுத்த மலேசிய அரசுக்கு மதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.