ஆதார் எண்ணை வைத்து இப்படியும் ஏமாற்றலாம்! உஷார்!

ஆதார் எண்ணை வைத்து இப்படியும் ஏமாற்றலாம்! உஷார்!

கிரெடிட் கார்டு வந்த புதிதில் ஏகப்பட்ட வழிகளில் பணம் திருடுவது நடந்தது. ஒவ்வொன்றாக அரசு கண்டறிந்து தடுத்து வந்தாலும், இன்றும் தொலைபேசி மூலம் அழைத்து கிரெடிட் கார்டு பற்றிய தகவல்களைக் கேட்பது தொடர்கிறது. இந்த வகை திருட்டுகளில் இப்போது ஆதார் கார்டும் சேர்ந்துகொண்டது என்பதுதான் வருத்தமான விஷயம்.

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டில் இருக்கும் 16 டிஜிட் எண்களும், கார்டுக்கு பின்னால் இருக்கும் cvv எண்ணும் தான் முக்கியம். இதை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்குவதற்கு பல முறை வேறு வேறு எண்களில் இருந்து அழைக்கிறார்கள் இந்த ஏமாற்றுக்காரர்கள். “உங்கள் சேவிங்க்ஸ் அக்கவுன்ட்டில் சேவைகளை மேம்படுத்த அழைத்திருக்கிறோம்” என வங்கியில் இருந்து பேசுவது போலவே பேசுவார்கள். முதலில் 16 டிஜிட் எண்ணை வாங்கிக் கொள்வார்கள். அடுத்த நாள் அழைத்து CVV மட்டும் போதும் என்பார்கள். இதைக் கொடுத்துவிட்டால் நம் கார்டு மூலம் ஆன்லைன் பர்ச்சேஸ் எதையாவது செய்துவிடுவார்கள். இது ஒரு வகை ஏமாற்று வேலை.

இப்போது, நம் ஆதார் எண்ணை நம்மிடமே வாங்கி அதன் மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்கிறார்கள். சமீபத்தில் ஒரு வாட்ஸ்அப் ஃபார்வர்ட் வைரல் ஆனது.

“ஆதார் எண் உங்களுக்கு இருக்கிறதா என்று கேட்டு உங்கள் மொபைல் போனுக்கு அழைப்பு வரும். ஆம் எனில் நம்பர் 1 ஐ அழுத்தவும் என்பார்கள். அழுத்தியவுடன். ஆதார் எண்ணை அழுத்தவும் என்று சொல்வார்கள். பிறகு ஒரு OTP (ONE TIME PASS-WORD) உங்கள் மொபைலுக்கு வரும். அந்த எண் என்ன என்று கேட்பார்கள். நீங்கள் அந்த நம்பரை சொல்லிய உடனே உங்கள் பேங்க் அக்கவுன்டில் உள்ள பணம் முழுதும் வழித்து எடுக்கப்பட்டுவிடும். ஏனெனில் உங்கள் ஆதார் எண் வங்கியில் அக்கவுன்ட் நம்பருடன் இணைக்கப்பட்டுள்ளது. உஷாரையா உஷாரு!!!!. ஆதார் எண்ணை போனில் யாருக்கும் சொல்லாதீங்க”

இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறதா என்று வங்கிகளில் கேட்டபோதும் பெயர் சொல்ல மறுத்த சிலர், “அப்படி எதுவும் நடக்கல. ஆனால், ஆதார் எண்னை தேவையில்லாமல் யாருக்கும் கொடுக்காதீங்க” என்றார்கள். இணையத்தில் பலர் இது போன்ற fake calls வருவதாக பதிவு செய்திருக்கிறார்கள். சிலர், எந்த எண்ணில் இருந்து அழைப்பு வருகிறது என்பதைக் குறிப்பிட்டு அந்தந்த வங்கிகளுக்கே மென்ஷன் போட்டிருக்கிறார்கள்.

ஆதார் எண்ணை ரகசியமாக வைத்திருப்பது சாத்தியம் இல்லை. கிட்டத்தட்ட அனைத்து சேவைகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கும் முனைப்பில் இருக்கிறது மத்திய அரசு. நமது மொபைல் சேவை தொடர்ந்து இயங்க, ஆதார் எண்ணை விரைவில் இணைக்கவும் என்கிறார்கள் இப்போது. நமது பெயர், முகவரி, பிறந்த தேதி தொடங்கி அனைத்தும் அந்த மொபைல் நிறுவனத்திடம் இருக்கிறது. இப்போது ஆதார் எண்ணை கேட்கிறார்கள். இந்தத் தகவல் அனைத்தும் மொபைல் நிறுவனத்தில் பணிபுரியும் அனைவருக்கும் ஆக்செஸ் உண்டு. மேலும், third party எனப்படும் ஏஜென்ட்களிடமும் இந்தத் தகவல்களை மொபைல் நிறுவனங்கள் பரிமாறும். ரீசார்ஜ் கடைக்காரர்களே, நமது எண்களை மார்க்கெட்டிங் நிறுவனத்திடம் விற்கிறார்கள். இந்த நிலையில் ஆதார் எண்ணும் கிடைத்தால் அதையும் விற்பார்கள். பின் எப்படி நாம் நமது ஆதார் எண்ணை ரகசியமாக வைக்க முடியும்?

ஒரே பாதுகாப்பு, நமது மொபைலுக்கு வரும் OTP தான். அது கிடைத்துவிட்டால் தீர்ந்தது விஷயம். எனவே, யார் உங்கள் மொபைலுக்கு அழைத்து விவரங்கள் கேட்டாலும் கொடுக்க வேண்டாம். மொபைல் மற்றும் வங்கி நிறுவனங்கள் சார்பில் அழைக்கும் நபர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் அடையாள அட்டை போன்று ஒரு பாதுகாப்பு அம்சம் அவசியம். இல்லையேல், ஒன்றும் அறியாத அப்பாவி மக்களிடம் எப்படியாவது ஏமாற்றி காசு பார்த்துக்கொண்டேயிருப்பார்கள் இந்த ஆன்லைன் அராஜக பேர்வழிகள்.

வீட்டில் இருக்கும் பெரியவர்களிடமும், ஆதார் மற்றும் இது போன்ற மோசடிகளை பற்றி அறிந்திராத மக்களிடமும் இது பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்துவது அவசியம். ஆதார் கார்டு வாங்க வைக்க இரவு பகல் பார்க்காமல் உழைக்கும் அரசு, இதையும் தானே செய்ய வேண்டும்.

Leave a Reply