கோரிக்கைகள் நிறைவேறும் – காலபைரவர் சந்நிதியில்!

கோரிக்கைகள் நிறைவேறும் – காலபைரவர் சந்நிதியில்!

சிவபெருமானின் திருமுகத்தில் இருந்து தோன்றியவரும், ஈசனைப் போலவே தனக்கும் ஐந்து தலைகள் இருப்பதாக எண்ணி கர்வம்கொண்ட பிரம்மதேவரின் கர்வத்தை அடக்க, அவருடைய ஒரு தலையைக் கொய்தவருமான கால பைரவருக்குத் தனிச்சிறப்பு வாய்ந்த கோயில் க்ஷேத்திரபாலபுரம் கால பைரவர் கோயில்.
கால பைரவர் இங்கே தனிக்கோயில் கொண்டதன் பின்னணியில் அமைந்திருக்கும் புராண வரலாற்றைப் பற்றி கோயில் அர்ச்சகர் குப்புசாமி சிவாச்சார்யரிடம் கேட்டோம்.

‘‘ஒரு காலத்தில் ஐந்து தலைகளுடன் விளங்கிய பிரம்மதேவர், ‘தனக்கும் ஐந்து தலை, ஈசனுக்கும் ஐந்து தலை. எனவே, தானும் சிவபெருமானுக்குச் சமமானவன்’ என்று ஆணவம் கொண்டார். பிரம்மதேவரின் அகந்தையைப் போக்கிட திருவுள்ளம்கொண்ட சிவபெருமான், தன் திருமுகத்தில் இருந்து பைரவரைத் தோற்றுவித்தார். அவரே கால பைரவர். சிவனாரின் திருவுள்ள குறிப்பின்படி கால பைரவர், பிரம்மதேவரின் ஒரு தலையைக்கொய்து, அவரிடமிருந்த அகந்தையை அகற்றினார். ஆனால், பிரம்மதேவரின் தலையைக் கொய்ததால் கால பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டுவிட்டது. அந்தத் தோஷத்தைப் போக்கிக்கொள்வதற்காகக் கும்பகோணம் அருகில் உள்ள திருவலஞ்சுழி தலத்துக்கு வந்தார்.

திருவலஞ்சுழியில் அருளும் வெள்ளை விநாயகரை வழிபட்டு, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்டார். தோஷத்திலிருந்து விடுபட்ட கால பைரவர், விநாயகரின் கட்டளைப்படி தம் கையில் இருந்த சூலத்தைக் கிழக்கு நோக்கி வீசினார். அது க்ஷேத்திரபாலபுரம் என்னும் தலத்தில் இருந்த நள தீர்த்தத்தில் விழுந்தது. அந்த நள தீர்த்தத்தில் நீராடிய கால பைரவருக்கு, வெள்ளை விநாயகர் காட்சி தந்து, ‘சூலாயுதம் விழுந்த இடத்தில் கோயில்கொண்டு, சூலை நோய், கை கால் பிடிப்பு, மூட்டுவலி உள்ளிட்ட சகல வியாதிகளையும் போக்கி அருளும் சஞ்சீவியாக இருப்பாயாக’ என்று கூற, அப்படியே கால பைரவர் இந்தத் தலத்தில் கோயில்கொண்டு அருள்புரிகிறார்’’ என்றார். அவரே தொடர்ந்து திருக்கோயிலின் சிறப்புப் பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகள் குறித்தும் விவரித்தார்.

‘‘தேங்காய் மூடியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், வாஸ்து தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் விலகிவிடுவதாக ஐதீகம். 11 மிளகுகளைச் சிவப்புத் துணியில் சுற்றி, தீபம் ஏற்றி வழிபட்டால், இழந்த பொருளைத் திரும்பப் பெறுவதுடன், வழக்குகளிலும் வெற்றி கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பூசணிக்காயை இரண்டாகப் பிளந்து அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பித்ரு சாபம், பெண் சாபம் போன்றவை நீங்கும். அதேபோல், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 54 முந்திரிக் கொட்டைகளை மாலையாகத் தொடுத்து, கால பைரவருக்கு அணிவித்து, தயிர் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். இப்படி ஒவ்வொரு கோரிக்கை நிறைவேறவும் ஒரு வழிபாடு இங்கே காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

இதுபோன்ற பிரார்த்தனைகளை எல்லாம் அஷ்டமி மற்றும் ஞாயிறு ஆகிய நாள்களில்தான் செய்ய வேண்டும். அப்படி 11 முறை செய்து, ஒவ்வொரு முறையும் கால பைரவரை 11 முறை வலம்வந்து வழிபட வேண்டும். அப்படிச் செய்தால், கோரிக்கைகள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Leave a Reply