ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இடஒதுக்கீடுக்கு எதிரானவரா? சமுக வலைத்தளங்களில் சர்ச்சை
பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளராக பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் நேற்று பாஜகவின் தேசிய தலைவர் அமீத்ஷா அவர்களால் முறைப்படி அறிவிக்கப்பட்டார். இவருக்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இவரை பற்றி ஒருசர்ச்சைக்குரிய கருத்து ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தீவிர ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரான ராம்நாத் கோவிந்த் கடந்த 2010 ஆம் ஆண்டு பாஜகவின் செய்தித்தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டப்போது, ‘மதம் மாறிய தாழ்த்தப்பட்டோருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையை எதிர்த்ததாக கூறப்படுகிறது.
அதாவது தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்தையோ அல்லது இஸ்லாமிய மதத்தையோ தழுவினால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். எனவே தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடுக்கு எதிரானவரா ராம்நாத் கோவிந்த் என்ற வதந்தி சமூக வலைத்தளத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.