பல நூற்றாண்டுகள் புதர்களால் சூழப்பட்டிருந்த அஜந்தா குகைகள்!

பல நூற்றாண்டுகள் புதர்களால் சூழப்பட்டிருந்த அஜந்தா குகைகள்!

இந்தியா அறிவியல், கலை மற்றும் மருத்துவத்தில் சிறந்து விளங்கிய நாடு. நம் முன்னோர்கள் கலையை அவர்களின் வாழ்வியலோடு பாதுகாத்து வாழ்ந்துவந்தனர். அவர்களின் படைப்பில் உருவான ஓவியங்களும் சிற்பங்களும் இன்னும் நம் பாரம்பரியத்தின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக காலத்தைக் கடந்து நிற்கின்றன. ஓவியங்களும் சிற்பங்களும் ஒரு காலத்தின் கலாசாரத்தையும் மக்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கக்கூடியவை. அடுத்த தலைமுறைக்கு, தான் கற்றுத் தெளிந்த அறிவை விட்டுச்செல்லும் குறிப்புகளாகத்தான் நம் முன்னோர்கள் கலையைப் பார்த்தார்கள். அந்த வரிசையில், மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத்தில் உள்ள அஜந்தா குடைவரைக் குகைகளில் உள்ள ஓவியங்களும் சிற்பங்களும், நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற கலைப் பொக்கிஷங்கள்.

மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத்திலிருந்து 110 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது, அஜந்தா. சென்னையிலிருந்து 1,257 கி.மீ பயணம்செய்தால், அஜந்தா கிராமத்தை அடையலாம். மும்பையிலிருந்து பயணம்செய்கிறீர்கள் என்றால், 430 கிலோ மீட்டர் பயணத்தில் அஜந்தா உங்களை வரவேற்கும். மலைச்சரிவுகளில் உள்ள பாறைகளைக் குடைந்தெடுத்து உருவாக்கப்பட்ட 30 குடைவரைக் கோயில்கள் அஜந்தாவை அலங்கரிக்கின்றன. இந்த குடைவரைக் கோயில்கள் அனைத்தும் மழைக் காலங்களில் புத்தமதத் துறவிகள் ஓய்வெடுக்கும் உறைவிடங்களாகவும் தியானம் செய்யும் இடங்களாகவும் பயன்படுத்தியதற்கான குறிப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு குடைவரைக் குகையிலும் புத்தரின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களைச் சித்தரிக்கும் வகையில் சிற்பங்களும் ஓவியங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. கி.மு 2 முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு கட்டங்களாக சிற்பங்களும் ஓவியங்களும் உருவாக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 1983 ஆம் ஆண்டு, அஜந்தா குடைவரைக் குகைகளை உலக பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது. அஜந்தா குகைகளுக்குக் கீழே ஓடிக்கொண்டிருந்த வகோரா நதியில் ஏற்பட்ட வெள்ளத்தாலும் இயற்கைச் சீற்றங்கள் காரணமாகவும் பல நூற்றாண்டுகளாக இந்தக் குகைகள், புதர்களால் சூழப்பட்டு மறைந்துகிடந்தன.

Leave a Reply