பெண்களின் தழும்புகளை போக்கும் இயற்கை வழிகள்
வடு அல்லது தழும்பு என்பது காயத்துக்குப் பிறகு ஏற்படும் ஓர் இழைநார்த் திசு. பெண்களின் உடலில் பிரசவத்துக்குப் பிறகும், உடல் எடைக் குறைப்புக்குப் பிறகும் தழும்புகள் ஏற்படுவது இயற்கையே. தசைகள் தம் இயல்புநிலையிலிருந்து புதிய நிலைக்குத் திரும்புவதால்தான் தழும்புகள் உருவாகின்றன.
தழும்புகளை ஆரம்பத்திலேயே கவனித்தால், இயற்கையான முறைகளில் மறையச் செய்யலாம்.
* ஆலிவ் எண்ணெய், மீன் எண்ணெய், வைட்டமின் இ எண்ணெய், ஃப்ளாக்ஸ் சீட்ஸ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு தழும்புகளின்மேல் தடவி மசாஜ் செய்யலாம். இது தழும்புகளின் தடத்தை நீக்கி, சருமப் பகுதியை இறுகச் செய்யும்.
* தழும்புகளே வராமல் தடுக்கவும் வந்த தழும்புகளை ஓரளவாவது மறைக்கவும் உடற்பயிற்சிகள் மிகவும் முக்கியம். முறையான உடற்பயிற்சிகள் சருமத்தை டோன் செய்து, அதன் மீள்தன்மையைச் சரியாக வைத்திருக்க உதவுகின்றன.
* நம் உடல் 64 சதவிகிதம் தண்ணீரால் ஆனது. எனவே, உடலை எப்போதும் நீர் வறட்சிக்குள்ளாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். தாகம் எடுக்கிறதோ இல்லையோ, தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். காபி மற்றும் ஏரியேட்டடு பானங்களை, அதாவது வாயு ஏற்றப்பட்ட பானங்களைத் தவிருங்கள். சருமம் அழகாவதுடன், தழும்புகளிலிருந்தும் தப்பிக்கலாம்.
* தழும்புகளுக்கு மட்டுமல்ல, வெயில் பாதிப்பு, சுருக்கங்கள், வெட்டுக்காயம், புண்கள் எனச் சருமம் தொடர்பான எல்லா பிரச்னைகளுக்கும் கற்றாழை ஜெல் மிகச் சிறந்த மருந்து. வாசனையோ நிறமோ கலக்காத சுத்தமான கற்றாழை ஜெல் கடைகளில் கிடைக்கும். அதைத் தழும்புகளின்மேல் தடவிவந்தால், நாளடைவில் அவை மறையும்.
* அழகுக்கலை நிபுணர் அல்லது சரும மருத்துவரிடம் உங்கள் சருமத்தின் தன்மைக்கேற்ற எக்ஸ்ஃபோலியேட்டர் எது எனக் கேட்டு வாங்குங்கள். அதைத் தழும்புகளின்மேல் தடவி மிக மென்மையாக மசாஜ் செய்து குளித்தால், தழும்புகள் நீங்கும். அழுத்தித் தேய்ப்பதோ அடிக்கடி தேய்ப்பதோ சருமத்தைக் காயப்படுத்தலாம் என்பதால் கவனம் தேவை