மீண்டும் கேரள கிறிஸ்துவ பெண் கேரக்டரில் த்ரிஷா
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘விண்ணை தாண்டி வருவாயோ’ திரைப்படத்தில் ஜெஸ்ஸி என்ற கேரள கிறிஸ்துவ பெண் கேரக்டரில் த்ரிஷா மிக இயல்பாக நடித்திருப்பார். அவருடைய அந்த கேரக்டருக்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில் தற்போது மீண்டும் அதேபோன்ற ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார்.
த்ரிஷா தற்போது நடித்து வரும் மலையாள திரைப்படமான ‘ஹேய் ஜூட்’ என்ற படத்தில் நிவின்பாலி ஹீரோவாக நடிக்கின்றார். இந்த படமும் ஒரு கிறிஸ்துவ பெண் காதலில் விழுவதும் அதனால் ஏற்படும் உணர்ச்சிமிக்க சம்பவங்களும் தான் கதை. இந்த படத்திலும் ஜெஸ்ஸி போலவே நடிப்பதற்கு மிக அதிக வாய்ப்பு இருப்பதால் மீண்டும் திரையில் த்ரிஷாவை ஜெஸ்ஸியை பார்க்க அவரது ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
த்ரிஷா நடிக்கும் முதல் மலையாள திரைப்படம் இது என்பதால் இந்த படத்திற்கு பின்னர் அவருக்கு மலையாள படவாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ள த்ரிஷா தற்போது மலையாளத்திலும் நடித்து வருவதால் தென்னிந்திய நாயகி பட்டியலில் இணைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.