வண்ண வண்ண நினைவுகளுடன் விடை பெறுகிறேன் பிரணாப் முகர்ஜி!
‘நான் இந்த நாடாளுமன்றத்தின் படைப்பாளி. வண்ண வண்ண நினைவுகளுடன் இந்த நாடாளுமன்றத்தில் இருந்து விடை பெறுகிறேன் ” என்று இன்று தனது பிரிவுபசார நிகழ்வில் குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜி உருக்கமாக பேசினார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் நாளையுடன் முடிவடைகிறது. கடந்த வாரம் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் அடுத்த குடியரசுத் தலைவராக ராம் நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பிரிவுபசார விழா நாடாளுமன்றத்தில் நடந்தது. நாடாளுமன்றத்துக்கு வந்த பிரணாப் முகர்ஜியை துணை குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார் ஆகியோர் வரவேற்றனர்.
தனது 20 நிமிட உரையில் பிரணாப் முகர்ஜி கூறுகையில், ”நாடாளுமன்றம் என்பது ஆக்கபூர்வமான விவாதங்களுக்கானது. அதற்குத்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர, இடையூறுகள் மூலம் சிதைக்கக் கூடாது. என்னுடைய வாழ்க்கையில் 37 ஆண்டுகளை நாடாளுமன்றத்திற்காக அர்பணித்துள்ளேன். எனது 34 வயதில் அவ்வப்போது பிரச்சாரம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. குடியரசுத் தலைவராக நாட்டின் இறையாண்மையை, அரசியலமைப்பு சட்டத்தை தாளில் மட்டும் அல்லாது உணர்வுடன் பாதுகாத்து வந்துள்ளேன்.
அவசர சட்டம் என்பது நெருக்கடியான, முக்கியமான நேரங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் நமது ஜனநாயகத்தின் முதிர்ச்சி வெளிப்படைகிறது.
எனது வழிகாட்டியாக இருந்த மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி உயர்ந்த தனித்துவத்துடன் திகழ்ந்தார். எமர்ஜென்சி முடிந்த இந்திரா காந்தி லண்டன் சென்று இருந்தார். அப்போது அவரிடம் கேள்வி கேட்க செய்தியாளர்கள் துடித்துக் கொண்டு இருந்தனர். செய்தியாளர்களில் ஒருவர், ”எமர்ஜென்சியின் மூலம் உங்களுக்கு என்ன கிடைத்தது என்றார். அதற்கு இந்திரா காந்தி கொஞ்சமும் அசராமல், ”அந்த 21 மாதங்களும் அனைவரையும் தனிமைப்படுத்த முடிந்தது” என்றார். சில நிமிட அமைதிக்குப் பின்னர், மீண்டும் அவரை கேள்வி கேட்க ஆள் இல்லை. செய்தியாளர்கள் மறைந்தனர்.
இந்திரா காந்தி இரும்புப் பெண்மணி. அவர்தான் என்னுடைய வழிகாட்டி, அவரை அடுத்து வாஜ்பாய், நரசிம்ம ராவ் அவர்களைக் கூறுவேன். சில சமயங்களில் அத்வானியை பின்பற்றியுள்ளேன். சோனியா அவர்களிடம் இருந்து எனக்கு தொடர்ந்து ஆதரவு கிடைத்துக் கொண்டு இருந்தது.
வண்ண வண்ண நினைவுகளுடன் இந்த மாண்புமிகு நாடாளுமன்றத்தில் இருந்து விடை பெறுகிறேன். நாட்டு மக்களுக்கு அவர்களது சேவகனாக இருந்து சேவை ஆற்றி இருப்பது எனக்கு மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளிக்கிறது” என்றார்.
இதையடுத்து பேசிய துணை குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரி, ”தேசிய மற்றும் சர்வதேச விஷயங்களை பிரணாப் அவர்கள் கையாண்ட விதத்தின் மூலம் நாட்டின் உயர் பதவிக்கான மாண்பு தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது. அவரால் இந்தப் பதவிக்கு மரியாதை கிடைத்துள்ளது” என்றார்.