கட்சி, நட்பு பேதமின்றி அனைத்து ஊழலையும் எதிர்ப்பேன்! திமுகவுக்கு கமல் மறைமுக தாக்குதலா?
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக அதிமுக அமைச்சர்களின் ஊழல் குறித்து மட்டும் பேசி வருவதால் அவர் திமுகவின் அனுதாபியோ என்று ஒருசிலருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக முரசொலி விழாவிற்கு அவர் வருகை தர ஒப்புக்கொண்டது இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் கமல் தற்போது தன்னுடைய டுவிட்டரில் பதிலளித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், ‘‘என் பிரகடனத்தில் பிழையிருக்கிறதாம். எல்லா ஊழல்களையும், சாடாத பிழை. கட்சி, நட்பு, குடும்ப பேதமின்றி எவ்வகை ஊழல்களையும் களைய முயல்வதென் கடமை. உமதும்’ என்று ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதில் கட்சி, நட்பு, குடும்ப என்ற வார்த்தைகள் திமுகவை குறிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.
மேலும் இன்னொரு பதிவில், ‘‘நான் ஊழலுக்கு எதிரானவன். எல் லோரும் பயப்படுவதைப்போல நான் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவன் அல்ல. கிளர்ச்சி யாளர்கள் எப்போதும் சாவுக்கும் தோல்விக்கும் அஞ்சமாட்டார்கள். நீங்கள்?’ என்று பதிவிட்டுள்ளார்.