முறைகேடாக குடியேறிய தொழிலாளர்கள்: மலேசியாவில் இந்தியர்கள் உள்பட 5000 பேர் கைதுமலேசிய குடிவரவுத்துறை கடந்த ஜூலை 1 முதல் நடத்திய சோதனைகளில் 5,065 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் முறையாகப் பதிவுச் செய்யாத தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பதிவுச் செய்வதற்கான காலக்கெடுவை நிர்ணயித்திருந்தது. அக்கெடு கடந்த ஜூன் 30 ஆம் தேதியோடு முடிந்ததையடுத்து, மலேசிய குடிவரவுத்துறை சோதனை நடவடிக்கைகளைத் தொடங்கியது. அதன்படி கைதுச் செய்யப்பட்டுள்ள 5,065 தொழிலாளர்களில் 1,520 பங்களாதேஷிகள், 1,476 இந்தோனேசியர்கள், மியான்மரைச் சேர்ந்த 429 பேர், வியட்னாமைச் சேர்ந்த 285 பேர், தாய்லாந்தைச் சேர்ந்த 206 பேர், பிலிப்பைன்சைச் சேர்ந்த 261 பேர் உள்ளடங்கியுள்ளனர்.
இவர்களை வேலைக்கு அமர்த்திய குற்றத்திற்காகப் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 108 பேரும் கைதுச் செய்யப்பட்டுள்ளமை இங்குக் குறிப்பிடத்தக்கது. “மொத்தம் 17,955 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பணி ஆவணங்களற்ற 5,065 தொழிலாளர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்” என மலேசிய குடிவரவுத்துறையின் இயக்குநர் ஜெனரல் முஸ்தாபர் அலி தெரிவித்துள்ளார்.
32 மில்லியன் மக்கள் தொகையினைக் கொண்டுள்ள மலேசியாவில் பதிவுச்செய்யப்பட்ட 2 மில்லியன் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இதே 2 மில்லியன் அளவிலான பதிவு செய்யப்படாத தொழிலாளர்கள் உள்ளதாக அரசு-சாராத் தொண்டு நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன. இந்நிலையில் கைதுச் செய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவரவர் நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.