நண்பர்கள் தினத்தில் உயிரிழந்த சகோதரனுக்கு ரக்சாபந்தன் தினத்தில் ராக்கி கட்டிய சகோதரி
நண்பர்கள் தினத்தில் உயிரிழந்த சகோதரரின் உடலுக்கு ரக்சாபந்தன் அன்று ராக்கி கட்டிய சகோதரி ஒருவரின் நெகிழ்ச்சியான செய்கை அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு கண்ணீரை வரவழைத்துள்ளது.
இந்த ஆண்டு நண்பர்கள் தினம் கடந்த ஞாயிறு அன்றும் ரக்சாபந்தன் தினம் திங்கள் அன்றும் வந்தது. இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று நண்பர்கள் தினத்தை முன்னிட்டு ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், திருப்பூரு பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் தனது நண்பர்களுடன் ஜாலியாக அருகில் உள்ள ஏரி ஒன்றில் குளிக்க சென்றார். ஆனால் திடீரென அவர் எதிர்பாராதவிதமாக ஏரியில் மூழ்கினார்
இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர்கள் அந்த பகுதி மக்களிடமும் காவல்துறையினர்களிடம் தகவல் அளித்தனர். காவல்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் மிகவும் கஷ்டப்பட்டு அடுத்தநாள் தான் வினோத்தின் உடலை கண்டுபிடித்தனர்
வினோத்தின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர்களும், உடன் பிறந்த தங்கையும், உறவினர்களும் கதறி அழுதனர். மேலும் அன்றைய தினம் ரக்சாபந்தன் தினம் என்பதால் உயிரில்லாத அண்ணன் கையில் அவருடைய தங்கை அழுதபடியே ராக்கி கட்டியது கல் நெஞ்சையும் கரையும் வகையில் இருந்தது.