மின்கட்டணத்தை குறைக்க என்னென்ன வழிகள்?
போன முறை மின் கட்டணம் 1,330 ரூபாய்தானே கட்டினோம்? இந்த முறை ஏன் 2,137 ரூபாய் வந்திருக்கிறது? மீட்டரில் எதும் பிரச்சினையா? இல்லையென்றால் நம்முடைய மின் பயன்பாடுதான் அதிகரித்துவிட்டதா?” என்று யோசிப்பவர்களா நீங்கள்? உங்களுக்காகத்தான் இக்கட்டுரை.
இரண்டு மாதத்தில் நீங்கள் பயன்படுத்திய யூனிட் 500. ஆனால் இந்த இரண்டு மாதத்தில் நீங்க பயன்படுத்திய யூனிட் 501 என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கட்டணம் ஒரு யூனிட் அதிகமாகிவிட்டது. அதனால் உங்கள் கட்டணம் மாறிவிடுகிறது. ஒரு யூனிட்தானே அதிகம் என்றாலும் நீங்கள் ரூ. 807 கட்ட வேண்டும். ஆனால் மின் கட்டண விகிதங்களின்படி 500 யூனிட் வரை உங்களுக்கு நீங்க பயன்படுத்திய மின்கட்டணத்தில் கழிக்கப்பட்டு வந்த மானியம் 501வது யூனிட்டிலிருந்து கிடையாது. அதைப் போல 500 யூனிட்டுக்கு மேல் யூனிட்டிற்கு 4.60 லிருந்து 6.60 என்று மாறிவிடுகிறது.
அதனால் இப்போது இரண்டு மாதத்துக்கு ஒரு முறை ரூ. 1300 மற்றும் அதற்கு மேல் மின்கட்டணம் கட்டுபவர்கள் ஆரம்பத்திலிருந்தே கொஞ்சம் ஜாக்கிரதையாக மின்சாரத்தைக் கண்காணித்துப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் தேவையில்லாமல் நாம் ரூ. 800-க்கு மேல் கட்ட வேண்டியதிருக்கும். இரண்டு மாதத்துக்கு 800 ரூபாய் என்றால் ஒரு வருடத்துக்கு 4800 ரூபாய் அதிகம் கட்ட வேண்டிவரும். உத்தேசமாக ரூ.1300க்கு மேல் கட்டுபவர்கள் மின் கட்டணம் குறிக்கவரும் மின்சார வாரியப் பணியாளர் சரியாக 60 நாளைக்கு ஒருமுறை வந்து கணக்கை எடுக்கிறாரா, எனக் கவனிக்க வேண்டியது அவசியம். இந்த ஆகஸ்ட் மாசம் வந்த மாதிரி நான்கைந்து நாள் தொடர்ச்சியாக விடுமுறை வந்ததென்றால் அவ்வளவுதான் உங்க மின்கட்டணம் எகிறிடும். அப்படி மின்கட்டணம் எகிறாமல் இருக்கச் சில வழிமுறைகளைப் பார்ப்போம்.
மின் கட்டணம் கணக்கெடுத்து 45 நாட்கள் ஆயிவிட்டது என்றால் சற்றுக் கவனம் தேவை. முக்கியமாக அதிகமாக மின்சாரம் செலவாகும் மின் உபயோகப் பொருள்களைக் கடைசி 10 நாள்களுக்கு மட்டும் சற்றுக் கவனமாகக் கண்காணித்தால் 500 யூனிட்டுக்கு மேல் போவதைத் தடுக்கலாம்.
அதற்காக மின் பயன்பாட்டைத் தேவையான அளவுக்குக் கட்டுப்படுத்தலாம். உதாரணமாக, தண்ணீர் மோட்டாரைப் பயன்படுத்தும்போது தொட்டி நிறையும் வரை ஓடவிடாமல் தேவைக்கு ஏற்றவாறு மட்டும் பயன்படுத்த வேண்டும். தேவையில்லாமல் எரியும் விளக்குகளை அணைத்து வைக்கலாம். மின் விசிறி வேண்டுமான அளவில் குறைக்கலாம். ஆட்கள் இல்லாதபோது பல அறைகளில் மின் விசிறி போட்டதுபோட்டபடியே இருக்கும். அதைத் தவிர்க்கலாம். பாலோ, இட்லி மாவோ வைக்காத பட்சத்தில் ஃப்ரிஜ்ஜை அணைத்துத் தேவையானபோது பயன்படுத்திக் கொள்ளலாம். வெளி ஊருக்குச் செல்லும்போது ஓரிரு நாட்கள் என்றாலும் ஃப்ரிஜில் உள்ளதைக் காலி செய்து ஆஃப் செய்துவைக்கலாம். வீட்டின் உள்ள விளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றினால் மின்செலவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தலாம். மேலே கூறியவற்றை நடைமுறைபடுத்திப் பார்த்தால் தேவையில்லாமல் அதிக தொகை செலுத்துவதை தவிர்க்கலாம்.