அரியலூர் அனிதாவுக்கு ஜி.வி.பிரகாஷ் நேரில் அஞ்சலி

அரியலூர் அனிதாவுக்கு ஜி.வி.பிரகாஷ் நேரில் அஞ்சலி

1176 மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத அரியலூர் அனிதா, நேற்று தற்கொலை செய்த கொண்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. ஆனால் அரசியல்வாதிகள் ஒரு இரங்கல் அறிக்கையை பெயருக்கு வெளியிட்டு தங்கள் வேலையை பார்க்க சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் அனிதாவின் மறைவிற்கு நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் அரியலூர் சென்று நேரில் அஞ்சலி செலுத்தியதோடு, அனிதாவின் தந்தைக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது:

டாக்டர் அனிதா, 1176 மார்க், கட் ஆப் 196.5. நான் அவருடைய வீட்டிற்கு சென்றிருந்தேன். என்னை வாங்க என்று அழைப்பதற்கு அந்த தங்கை உயிருடன் இல்லை. நீதி கிடைக்கும் என்று நம்பிய அந்த மாணவிக்கு கடைசி வரை நீதி கிடைக்கவில்லை. இனிமேலும் அனிதா போன்ற சகோதர சகோதரிகளுக்கு நீதி கிடைக்குமா? என்று எனக்கு தெரியவில்லை. ஒரு ஏழை மாணவி ஒரு டாக்டராகவோ அல்லது நல்ல வேலையில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது தவறா? அந்த படிப்பை அனிதா தவம் மாதிரி படித்து நல்ல மார்க் வாங்கியுள்ளார்கள்

இவ்வளவு நல்ல மார்க் வாங்கிய அனிதாவுக்கு நீட் தேர்விலும் நல்ல மார்க் வாங்குவது ஒரு பெரிய விஷயமே இல்லை. அதற்கான பயிற்சியும் நேரமும் கொடுத்திருந்தால் அவர் கண்டிப்பாக வெற்றி பெற்றிருப்பார். கல்வி சிஸ்டம் வரைமுறை இல்லாமல் உள்ளது. ஸ்டேட் போர்டில் படித்த ஒரு மாணவி சென்ட்ரல் போர்டின் கேள்விகளுக்கு பதிலெழுத தவறுவதற்கு காரணம் நம்முடைய கல்வி சிஸ்டம் சரியில்லை. நாம் தான் அந்த சிஸ்டத்தை வரைமுறைப்படுத்த வேண்டும். இதுபோன்ற ஒரு தற்கொலை இந்தியாவில் கடைசியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் தனது வீடியோ செய்தியில் கூறியுள்ளார்.

 

Leave a Reply