ஓடும் பேருந்தில் இருந்து தனியாக கழண்டு ஓடிய சக்கரம்: பயணிகள் அதிர்ச்சி
பெங்களூர் பேருந்து ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென முன்சக்கரம் கழண்டு தனியாக ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பெங்களூர் பேருந்துகளில் பல சரியான பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படுவதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் இன்று 25 பயணிகளுடன் 252 என்ற எண் கொண்ட பேருந்து ஒன்று மெஜஸ்டிக் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் அந்த பேருந்தில் இருந்த முன்சக்கரம் திடீரென கழண்டு பக்கவாட்டில் தனியாக ஓடியதால் பேருந்து திடீரென நின்றது. இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லையென்றாலும் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்து பெங்களூரு போக்குவரத்து கழகம் விசாரணையை தொடங்கியுள்ளது. பேருந்து சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் தான் இந்த விபத்து நடந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் பேருந்தில் இருந்து சக்கரம் கழண்டு ஓடும் சிசிடிவி கேமிராவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.