நர்ஸிங், பி.பார்ம், டி.பார்ம் படிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது!
நீட் தேர்வு குறித்த விவாதங்கள் தொடந்துகொண்டிருக்கின்றன. நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று, எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கிவிட்டன. மருத்துவத் துறையில் நுழைய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், நர்ஸிங், பி.பார்ம் ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்ஸிங் தெரபி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பை மருத்துவக் கல்வி இயக்ககமும், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையும் வெளியிட்டிருக்கின்றன.
நர்ஸிங்
மருத்துவக் கல்வி இயக்ககம், இன்று முதல் (11.09.2017) பி.எஸ்ஸி நர்ஸிங் (போஸ்ட் போசிக்) மற்றும் பி.பார்ம் (லேட்டரல் என்ட்ரி) மற்றும் டிப்ளோமா பார்மசி படிப்புகளுக்கான விண்ணப்பத்தை வழங்குகிறது. விண்ணப்பத்தை, www.tnhealth.org அல்லது www.tnmedicalselection.org இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 22.09.2017.
பாளையங்கோட்டை மற்றும் சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில், இரண்டரை ஆண்டு கால ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பும், நர்ஸிங் தெரபி பட்டயப்படிப்பும் நடத்தப்படுகின்றன. இந்தப் படிப்புகளில் சேர, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை விண்ணப்பத்தை வழங்கிவருகிறது. இந்தப் படிப்பில் சேர விரும்புபவர்கள், மேல்நிலைப் பள்ளி தேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தைப் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி, சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி, நாகர்கோவில் கோட்டாறில் அமைந்துள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, மதுரை திருமங்கலத்தில் அமைந்துள்ள அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை அரும்பாக்கத்தில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் 350 ரூபாய். இதை `இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி, சென்னை – 106′ என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் எடுக்கப்பட்ட வங்கி வரைவோலையாக எடுத்து, விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தை அஞ்சல் வழியாகப் பெற, கூடுதலாக 70 ரூபாய் மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டிய A4 அளவுள்ள தபால் உறையை மேற்கண்ட ஏதேனும் ஒரு கல்லூரியின் முதல்வருக்கு விண்ணப்பம் வேண்டி கடிதம் எழுதிப் பெற்றுக்கொள்ளலாம்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதி திராவிடர், அருந்ததியர், பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணத்திலிருந்து விலக்கு வழங்கப்படுகிறது. கட்டண விலக்கு பெற விரும்பும் மாணவர்கள், சாதி சான்றிதழின் நகல் மற்றும் +2 மதிப்பெண் சான்றிதழ் நகலுடன் கேட்புக் கடிதம் எழுதி விண்ணப்பத்தைப் பெற வேண்டும். விண்ணப்பப் படிவம் 27.09.2017-ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும். விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க கடைசி நாள் 28.09.2017. விண்ணப்பத்தை ஆன்லைன் வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை, `செயலாளர், தேர்வுக் குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை – 600106′ என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
இந்த ஆண்டு நர்ஸிங் மற்றும் இதர மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு, நீட் மதிப்பெண் தேவையில்லை. ஆனால், அடுத்த ஆண்டு மருத்துவம் சார்ந்த அனைத்து துணை படிப்புகளுக்கும் நீட் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்க வாய்ப்பு இருக்கிறது. ஆகையால், இந்த ஆண்டே பி.எஸ்ஸி நர்ஸிங், பி.பார்ம் மற்றும் ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிப்பது நல்லது.