கடைசியில் அனைவரும் என்னிடம் தான் வரவேண்டும்: டிடிவி தினகரன்
இன்று கூடிய அதிமுக பொதுக்குழுவில் சசிகலா பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதுமட்டுமின்றி அவர் நியமனம் செய்த அனைத்து பொறுப்புகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. எனவே துணைப்பொதுச்செயலாளர் தினகரன் நியமனம் உள்ளிட்ட பல நியமனங்கள் இனி செல்லாது.
இந்த நிலையில் பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானத்தால் தினகரன் பொங்கி எழுந்துள்ளார். சற்றுமுன்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் கூறியதாவது:
பொதுக்குழு என்ற பெயரில் அவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்களைப் பார்த்தேன். நான் ஏற்கெனவே சொன்னதுபோல, கட்சியின் பொதுக்குழுவை பொதுச் செயலாளர்தான் கூட்ட முடியும். அவர் பணியாற்ற முடியாததால், துணை பொதுச் செயலாளர் நான்தான் கூட்ட முடியும். அவர்கள் கூட்டி இருப்பது பொதுக்குழுவே அல்ல.
அவர்கள் எந்தத் தீர்மானம் நிறைவேற்றினாலும் அது சட்டப்படி செல்லாது என நேற்றே நீதிமன்றம் சொல்லிவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டால்தான் இவர்கள் தீர்மானம் செல்லும். இவர்களைப் பதவியில் வைத்த சசிகலாவுக்கே இவர்கள் இத்தனை துரோகம் செய்கிறார்கள் என்றால், மக்களுக்கு இவர்கள் என்ன நல்லது செய்யப்போகிறார்கள் என்று மக்கள் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள்.
ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் பணியில் நான் இறங்கிவிட்டேன். அம்மா இருந்த பொதுச் செயலாளர் பதவியில் யாரையும் இவர்களால் பார்க்க முடியவில்லை என்பதைப் போல, அவர் இருந்த முதலமைச்சர் பதவியில் இவர்கள் இருப்பதை எங்களாலும் பார்க்க முடியவில்லை. இந்த ஆட்சியை உன்னால்தான் மாற்ற முடியும் என்று மக்கள் எங்களிடம் தெரிவிக்கிறார்கள். இரண்டு துரோகமும் கூட்டணி வைத்துள்ளன. ஆட்சி முடிந்ததும் அனைவரும் எங்களிடம் வருவார்கள்
இந்த ஆட்சிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு சில அமைச்சர்கள், நாங்கள் தி.மு.க-வுடன் கூட்டணி வைத்துள்ளதாகக் கூறுகிறார்கள். அவர்கள் தேர்தலைச் சந்தித்தால், டெபாசிட் கூட பெற மாட்டார்கள். தேர்தல் களத்தில் எங்களுக்கும் தி.மு.க.வு -க்கும் தான் போட்டி. ஆளுநர் இரண்டு நாளில் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன். இல்லையென்றால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். அவர்களுக்கு தற்போது பெரும்பான்மை இல்லை. தேர்தல் நடந்தால் உன்மையான அ.தி.மு.க யார் என்பது தெரியவரும்” என்றார்.
இவ்வாறு தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.