விருந்தாளிகளை வாசலே வரவேற்கும்

விருந்தாளிகளை வாசலே வரவேற்கும்

வீட்டின் தோற்றத்தைத் தீர்மானிக்கக்கூடிய முக்கிய அம்சங்களில் வாசல்களுக்குப் பெரும்பங்குண்டு. வீட்டுக்கு வரும் விருந்தினர்களை வாசல்தான் உங்களுக்கு முன்னால் முதலில் வரவேற்கும். அதனால், வீட்டின் வாசலை வடிவமைக்கும்போது கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வது அவசியம். பரவலான வெளிச்சம், வராந்தாவில் வைக்கப்படும் பொருட்கள் போன்றவை வாசல் வடிவமைப்பைத் தீர்மானிப்பவை. வீட்டுக்குள் நுழைபவர்களுக்கு உடனடியாக வீட்டு உரிமையாளருடைய ரசனையைத் தெரிவிப்பவை வாசல்கள். இந்தக் காரணத்தாலேயே உள் அலங்கார வடிவமைப்பாளர்கள் வீட்டின் வாசலை வடிவமைக்க கூடுதல் முக்கியத்துவம் அளிப்பார்கள். வாசலை வடிவமைக்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்…

வீட்டின் வாசலின் அளவை வைத்துதான் வடிவமைப்பைத் தீர்மானிக்க முடியும். உங்கள் வீட்டின் வாசல் பெரிதாக இருந்தால், அதில் ஒரேயொரு சிறிய மேசையை மட்டும் ஒரு ஓரத்தில் வைத்தால் எடுபடாது. அகலத்துக்கு ஏற்றபடி, பெரிய பூ ஜாடி, பூந்தொட்டி, மேசை, விளக்கு, கண்ணாடி போன்ற பொருட்களைத் தேர்ந்தெடுக்கலாம். இந்தப் பொருட்களை வைத்த பிறகும், இடமிருந்தால் அமர்ந்து இளைப்பாறுவதற்காக ஒரு மர பெஞ்சைப் போடலாம்.

வாசலில் பொருத்தக்கூடிய விளக்குகளை ஒரே மாதிரியான வடிவமைப்பில் தேர்ந்தெடுக்காமல் விதவிதமான வடிவமைப்பில் தேர்ந்தெடுப்பது நல்லது. வாசலில் கூண்டு விளக்குகள் (lanterns), ஸ்கான்ஸ் (sconce) விளக்குகள், மேசை விளக்குகள் போன்ற விளக்குகளைக் கலந்து பயன்படுத்தலாம். அத்துடன், தரை விளக்குகளை வாசல் வடிவமைப்புக்குப் பயன்படுத்துவதும் இப்போது அதிகரித்திருக்கிறது.

வீட்டை வடிவமைக்கத் தேர்ந்தெடுத்திருக்கும் உள் அலங்கார வடிவமைப்புப் பாணியையே வாசலிலும் பயன்படுத்துவதுதான் சிறப்பானது. இது வீட்டின் உள் அலங்காரத்தைப் பற்றிய ஓர் அறிமுகப் பிம்பத்தை வீட்டுக்குள் நுழையும்போதே கொடுக்கும். ஒருவேளை, நீங்கள் வீட்டின் உள் அலங்கார கருவாக இந்திய பாரம்பரிய அலங்காரத்தைத் தேர்ந்தெடுத்திருந்தால், வாசலில் விரிக்கும் தரைவிரிப்பில் தொடங்கி, கண்ணாடி, மேசை, விளக்குகள் அறைக்கலன்கள் என எல்லாவற்றிலும் பாரம்பரிய அலங்காரத்தின் பிரதிபலிப்பு இருக்க வேண்டும். இந்த அலங்காரம் வீட்டின் உள் அலங்காரத்தைப் பற்றிய ஆர்வத்தை விருந்தினர்களுக்கு உருவாக்கும்.

தரைவிரிப்புகளைத் தேர்ந்தெடுக்கும்போது, வாசலின் அளவைப் பொறுத்து வடிவத்தையும் அமைப்பையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். வாசல் நீளமான வடிவமைப்பில் இருந்தால், நீள வடிவத் தரைவிரிப்புதான் அதற்குப் பொருத்தமானதாக இருக்கும்.

வாசலுக்குத் தேர்ந்தெடுக்கும் நிறங்களைப் பொறுத்தவரை, அடர்நிறங்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இது வீட்டுக்குள் நுழைந்தவுடன் ஒருவிதமான புத்துணர்வை அளிக்கும். மஞ்சள், ஆரஞ்சு, கருநீலம், கரும்பச்சை போன்ற வண்ணங்களைப் பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.

நீங்கள் வசிக்கும் பகுதியின் தனித்துவத்தை எடுத்துரைக்கும் ஓர் அலங்காரத்தையும் வாசலில் சேர்க்கலாம். உங்கள் ஊரின் சிறப்புகளை விளக்கும் ஓவியங்கள், கலைப்பொருட்கள் போன்றவற்றையும் வாசல் அலங்காரத்துக்குப் பயன்படுத்தலாம்.

வரவேற்பறைச் சுவரில் மட்டும்தான் சுவரொட்டிகளைப் (Wallpaper) பயன்படுத்த வேண்டுமென்ற அவசியமில்லை. வீட்டின் வாசலில் சுவரிலும் அழகான சுவரொட்டிகளைத் தேர்ந்தெடுத்து ஒட்டலாம்.

Leave a Reply