அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் ஒரு பைசா அதிகமாக கொடுக்க வேண்டாம்: விஷால்

அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் ஒரு பைசா அதிகமாக கொடுக்க வேண்டாம்: விஷால்

 சினிமா டிக்கெட்டுகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக ஒரு பைசா கூட கொடுக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

தமிழ் திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்ட கேளிக்கை வரியை 10 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகக் குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பேச்சுவார்த்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், தமிழ் படங்களுக்கான கேளிக்கை வரியைக் குறைத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், 20 சதவீதமாக உள்ள பிற மொழி படங்களுக்கான கேளிக்கை வரியையும் குறைக்க கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.

“தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். ஏசி அல்லாத தியேட்டர்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.30. அதிகபட்ச கட்டணம் 80. ஏசி தியேட்டர்களில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.40. அதிகபட்சம் ரூ.100. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் குறைந்தபட்சம் ரூ.50. அதிகபட்சம் ரூ.150. இதற்கு மேல் ஒரு பைசாகூட கொடுக்க வேண்டாம். அதிகமாக டிக்கெட் கட்டணம் வசூலித்தால் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்கலாம்.

தியேட்டர்களில் உள்ள கேன்டீன்களில் அதிகமான விலையில் பேக் செய்யப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள் விற்கக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் ஜனவரி 2018 முதல் அமலுக்கு வருகிறது.” என்றும் விஷால் கூறினார்.

Leave a Reply