சென்னை: விதிகளை மீறி விற்பனை செய்த பாக்கெட் உணவுப் பொருட்கள் பறிமுதல்
சென்னையில் ரிலையன்ஸ் பிரஷ் உள்பட ஒருசில பல்பொருள் அங்காடிகளில் விதிகளை பின்பற்றாமல் விற்பனை செய்யப்பட்ட பாக்கெட் உணவுப் பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, விலை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஸ்டிக்கர், பாக்கெட்டின் உட்புறத்தில் இருக்க வேண்டும் என்பது உணவு பாதுகாப்பு சட்டத்தின் ஒழுங்குமுறைபடுத்தப்பட்ட விதிகளின் கீழ் உள்ள விதிகளில் ஒன்று
ஆனால் இந்த விதியை பின்பற்றாமல் காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்களை பாக்கெட்டின் வெளியே ஒட்டி, காலாவதி ஆன பின்னர் வேறு ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்யப்படுவதாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது
இந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் உள்ள 200 பல்பொருள் அங்காடிகளுக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 15ஆம் தேதி நோட்டீஸ் வழங்கினர். ஆனால், ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட ஏராளமான ஸ்டிக்கர்கள் கையிருப்பு இருப்பதாகக் கூறி, கடை உரிமையாளர்கள் பலர் அவகாசம் கேட்டதால், 3 மாதத்தில் விதிகளை பின்பற்ற அனுமதியளிக்கப்பட்டது.
இந்த நிலையில், ராயப்பேட்டை, வடபழனி, நுங்கம்பாக்கம், எம்.கே.பி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் சோதனை மேற்கொண்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், விதிகளை பின்பற்றாமல் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.